ஆவடி, அக்.2: ஆவடியில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆவடி காமராஜர் நகர் பகுதிக்கு ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், காமராஜ் நகர் மின்னூட்டி மற்றும் ஜம்பர் பழுது காரணமாக நேற்று முன்தினம் இரவு 10.40 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்டது.
இதனால், காமராஜர் நகர், பருத்திப்பட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்வெட்டு ஏற்பட்டது. இதனால் முதியவர்கள், உடல்நிலை பாதித்தோர், குழந்தைகள், பெண்கள் தூக்கமின்றி தவித்தனர். இதையடுத்து, 11.55 மணியளவில் பழுது சரி செய்யப்பட்டு மின் விநியோகம் சீரானது.


