சென்னை: இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனமான ஏஐசி, ‘நேர்மையால் வளம்’ என்ற கருப்பொருளில் நடப்பு 2026ம் ஆண்டுக்கான ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தைக் கடைப்பிடித்து வருகிறது. நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளிலும் நேர்மை, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ஏஐசி சார்பில் நேற்று நடைபயணம் நடைபெற்றது. இதில் நிறுவனத்தைச் சேர்ந்த சுமார் 150 ஊழியர்கள் பங்கேற்றனர். நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மினி ஜார்ஜ் மற்றும் தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி உதய் லக்ஷ்மண்தாஸ் தேவி ஆகியோர் நடைப்பயணத்தைத் தொடங்கி வைத்தனர். நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொழில்முறை மற்றும் பொதுவாழ்வில் விழிப்புணர்வு மற்றும் நெறிமுறையான செயல்பாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் இந்த நடைபயணம் அமைந்தது.
மேலும் விழிப்புணர்வு வாரம் முழுவதும் ஊழியர்களிடையே நெறிமுறை சார்ந்த மதிப்புகளை வளர்க்கவும், ஊழல் தடுப்பு விழிப்புணர்வை வலுப்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏஐசி நடத்தி வருகிறது. கட்டுரைப் போட்டிகள், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வினாடி வினா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் அன்றாடப் பணிகளில் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது. மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கும், நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கும், நிலையான வளத்தை உருவாக்குவதற்கும் நேர்மை அடிப்படையானது என்பதை இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்துவதாக ஏஐசி தெரிவித்துள்ளது.


