திருத்தணி: ஆர்.கே.பேட்டை அடுத்த மீசரகண்டாபுரம்-சானூர் மல்லாபுரம் சாலை பணி 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த மீசரகண்டாபுரம்- சானூர் மல்லாவரம் ஒன்றிய சாலை கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் 800 மீட்டர் தார் சாலை அமைக்க ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் ஒப்பந்ததாரர் மூலம் சாலை பணிகள் தொடங்கி குண்டும் குழியுமாக இருந்த சாலையை பொக்லைன் மூலம் சமன் செய்தனர். மேலும் சாலை முழுவதும் மண், ஜல்லி சிப்ஸ் கொட்டி பரப்பட்டுள்ளது.
இருப்பினும் தார் சாலை அமைக்காமல் சாலைப் பணிகள் 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வரும் மீசரகண்டபுரம்- சானூர் மல்லாவரம் சாலையில் வாகனங்களில் சென்று வருபவர்கள் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். மேலும் கிராம மக்கள் சாலையில் சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
சாலைப் பணிகள் முடங்கியுள்ளது குறித்து ஒன்றிய பொறியாளர் சக்தி கூறியதாவது: முதலமைச்சரின் கிராம சாலை திட்டத்தில் தார் சாலைப் பணி ஒப்பந்ததாரர் சாலையில் ஜல்லி கொட்டிய நிலையில் தார் விலை உயர்ந்ததால் பழைய ஒப்பந்தம் நிதியிலிருந்து பணிகள் மேற்கொள்ள முடியாத நிலையில் சாலைப் பணிகளை கிடப்பில் போட்டுள்ளார். இதனால் சாலைப் பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டது. மாவட்ட கலெக்டர் மூலம் ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் தார் சாலை பணிகள் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


