திருவள்ளூர்: திருவள்ளூர் வட்டத்திற்கு உட்பட்ட நத்தமேடு கிராமத்தில் உள்ள புல எண்.850/1-ல் நீர்வளத்துறையின் பராமரிப்பில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரக்கோரி மாவட்ட கலெக்டருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. அந்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் உதவி பொறியாளர் உஷா ஆகியோர் நத்தமேடு பெரிய ஏரியினை அளவீடு செய்து தருமாறு பரிந்துரை செய்தனர்.
அதன் பேரில் திருவள்ளூர் வட்டாட்சியர் வி.சரண்யா நத்தமேடு பெரிய ஏறியினை நில அளவை செய்து ஏரி வகைப்பாட்டில் எரிமேடை, மதில் சுவர் மற்றும் 6 கல்லறைகள் ஆகியவை உள்ளதாக அறிக்கையினை சமர்ப்பித்தார். அதனடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கால அவகாசம் முடிவடைந்தது. ஆனால் நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. எனவே நீர்வளத்துறை மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்ற திருவள்ளூர் வட்டாட்சியர் ஒத்துழைப்பு வழங்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் உஷா ஆகியோர் தலைமையில் வட்டாட்சியர் வி.சரண்யா முன்னிலையில் திருநின்றவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நேற்று நீர்வளத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதில் 90 சதவீதம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அப்போது பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியினை தடுத்து நிறுத்தி அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடுகாட்டில் புதியதாக எரிமேடை அமைக்கும் வரை இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என வாதிட்டு ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.இந்நிலையில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் உத்தரவின் படியும், தமிழ்நாடு ஏரிகளை பாதுகாத்தல் மற்றும் அகற்றும் சட்டம் 2007-ன் படியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


