Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஆன்மிக நகரமான திருத்தணியில் தரமற்ற உணவு வழங்கி இருமடங்கு லாபம் பார்க்கும் தனியார் ஓட்டல்கள்;உணவு பாதுகாப்புத்துறை அலட்சியம்

திருத்தணி: ஆன்மிக நகரமான திருத்தணியில் உயர்தர உணவகங்கள் பெயரில் பக்தர்களிடம் தரமற்ற உணவுக்கு இரண்டு மடங்கு பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி முருகன் கோயிலுக்கு, நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. வாரத்தில் வெள்ளி முதல் ஞாயிறு வரை மூன்று நாட்களும் சுப முகூர்த்தம், விழா நாட்கள், பண்டிகை தினங்களில் திருத்தணியில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் கோயில் தங்கும் விடுதிகள் மட்டுமின்றி, தனியார் விடுதிகள், சொகுசு விடுதிகள் என அனைத்து விடுதிகளும் நிரம்பி விடுகிறது.

பக்தர்கள் வசதிக்காக திருத்தணி முருகன் கோயிலில் கடந்த திமுக ஆட்சியில் ரூ.103 கோடி மதிப்பீட்டில் மாஸ்டர் பிளான் திட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் நகரில் சொகுசு தனியார் விடுதிகள், ஓட்டல்கள் உள்பட ஏராளமான உயர்தர சைவ உணவகங்களும், அதே நேரத்தில் சாலையோர கடைகளும் முளைத்து வருகிறது. மேலும் பக்தர்கள் வசதிக்கேற்ப உயர்தர உணவு கூடங்களில், சாலையோர கடைகளில் சாப்பிடுகின்றனர்.

வார விடுமுறை நாட்களில் மற்றும் பண்டிகை கால நாட்களில் ஓட்டல்களுக்கு கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு வழங்கி வருவாய் ஈட்டும் நோக்கில் ஓட்டல்களில் தரமற்ற உணவு வழங்கி இரண்டு மடங்கு பில் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மேலும் பல பக்தர்கள் உணவு தரமாக இல்லை என்றும், கலப்பட உணவு பொருட்கள் பயன்படுத்தி உடல் நலக்கேடு ஏற்படும் வகையில் உணவு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

பக்தர்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடாமல் பெயர் அளவில் சோதனை நடத்தி அபராதம் விதித்து சென்று விடுவதால், உயர்தர சைவ உணவகங்கள் மற்றும் சாலையோர கடைகளில் உணவு தரமின்றி விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே ஆன்மிக நகரில் உணவு தரத்தை தொடர்ந்து கண்காணித்து விலையை கட்டுப்படுத்தும் வகையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அசைவ உணவு கடைகளால் பக்தர்கள் அதிருப்தி

திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து பேருந்துகள், கார்கள், ரயில்கள் மூலம் வருகை தரும் பக்தர்கள் சன்னதி தெரு, அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகள் வழியாக சாமி தரிசனம் செய்ய செல்கின்றனர். பழைய பேருந்து நிலையம் அருகே சன்னதி தெருவில், அரக்கோணம் சாலையில் ஏராளமான அசைவ உணவு விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஒழுங்குப்படுத்தி பக்தர்கள் மன மகிழ்ச்சியோடு சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.