திருவள்ளூர்,ஆக.29: திருவள்ளூர் அடுத்த புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கமல்(27). இவர் வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். கடந்த ஆடி மாதம் புன்னப்பாக்கம் முத்து மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை வழக்கறிஞர் கமல் தட்டிக் கேட்டுள்ளார். பிறகு இந்த தகராறு குறித்து புள்ளரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்த முன் விரோதம் காரணமாக நேற்று காலை வழக்கறிஞர் கமல் தனது தந்தையுடன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த நபர்கள் சரமாரியாக தாக்கியும், முதுகில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தலைமுறைவாகிவிட்டனர். இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக கமலை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கறிஞரின் தந்தை புள்ளரம்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார். திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்து வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் கமலை வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்ட நபர்களை தேடி வருகின்றார்.



