திருத்தணி, ஆக.29: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகூர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் முருகூர் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் நகராட்சி சார்பில் டிராக்டர், டேங்கர் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் போதுமானதாக இல்லை என்றும், குடிநீர் சுத்தமாக இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால், பைப் லைன்கள் மூலம் குடிநீர் வழங்க வலியுறுத்தி முருகூர் பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருத்தணி-சித்தூர் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து நகராட்சி ஆணையர் கன்னியப்பன் மற்றும் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சாலை மறியல் போராட்டத்தை கைவிடச் செய்தனர்.
மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் பைப் லைன்களில் குடிநீர் வழங்க முடியவில்லை. மழைநீர் வடிகால்வாய் பணிகள் விரைவாக முடித்து உடனடியாக பைப்லைன் அமைத்து நகராட்சி சார்பில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் உறுதி கூறியதை ஏற்று பெண்கள் கலைந்து சென்றனர்.



