தண்டையார்பேட்டை: சென்னை உயர் நீதிமன்றம் அருகே, மாநகர பேருந்து மோதி 13 கார்கள் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தீவுத்திடலில் இருந்து கோவளம் நோக்கி செல்லும் மாநகர பேருந்து (தடம் எண்:109) நேற்று மதியம், பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலை வழியாக சென்றது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, உயர் நீதிமன்றம் வெளியே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த 13க்கும் மேற்பட்ட கார்களை இடித்து சேதப்படுத்தி சென்டர் மீடியன் மீது ஏறி நின்றது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறிக் கூச்சலிட்டனர். இதில், பேருந்தில் இருந்த சிலர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு கடற்கரை போக்குவரத்து போலீசார், மற்றும் பூக்கடை போக்குவரத்து புலனாய்வு போலீசார், எஸ்பிளனேடு போலீசார் ஆகியோர், மாநகர பேருந்து டிரைவர் ராமமூர்த்தியை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும், சாலையோரைம் நிறுத்தியிருந்த வழக்கறிஞர்களின் 13க்கும் கார்கள் சேதமடைந்த நிலையில், கார்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் உயர் நீதிமன்ற பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


