Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பெண்கள் வசிக்கும் அறையில் ரகசிய கேமரா வைத்து கண்காணித்த வீட்டு உரிமையாளர் மகனுக்கு சிறை

பூந்தமல்லி, ஆக.26: பெண்கள் வசிக்கும் அறையின் சுவிட் பாக்சில் ரகசிய கேமரா வைத்து கண்காணித்த வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் பெண்கள் தங்குவதற்காக நிறுவனம் சார்பில் வாடகை வீடு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் தங்கி மூன்று பெண்களும் வேலைக்கு சென்று வந்தனர். பெண்கள் வேலைக்கு சென்று விட்டு வரும்போதும், போகும் போதும் வீட்டின் உரிமையாளர் மகன் சரவணன் என்பவர் அந்தப் பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீட்டில் உள்ள அறைகளை அந்தப் பெண்கள் சோதனை செய்தபோது வீட்டில் உள்ள மின்சார சுவிட்ச் பாக்சில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும், அந்த கண்காணிப்பு கேமராவை சரவணன் தனது செல்போனில் இணைத்து பார்த்து வருவதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானகரம் காவல் நிலையத்தில் பெண்கள் புகார் அளித்தனர். அதன்பேரில், வானகரம் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, வீட்டின் உரிமையாளர் மகன் அடையாளம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன்(27) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் வீட்டை வாடகைக்கு விடும்போது சரவணன் வீட்டில் உள்ள சுவிட்ச் பாக்சில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தி அதனை தனது செல்போனுடன் இணைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சரவணனிடம் இருந்து செல்போன் மற்றும் வீட்டில் அறையில் வைக்கப்பட்டிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போலீசார் கைது செய்யப்பட்ட சரவணனை நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி புழல் சிறையில் அடைத்தனர்.