புழல், ஆக.26: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து வருகிறது. பொன்னேரி, சோழவரம், செங்குன்றம், புழல், பாடியநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சோழவரத்தில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. பூண்டி ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருவதால், கடந்த சில நாட்களாக 210 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில், மழை காரணமாக புழல் ஏரிக்கு நீர்வரத்து 255 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 1735 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. 21.2 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 13.14 அடி உயரத்தில் நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து 181 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும், ஏரிக்கு பின்பக்கம் உள்ள பம்மது குளம் ஏரி தற்போது பராமரிப்பு இல்லாததால் செடி கொடிகள் வளர்ந்து மழை பெய்தால் தண்ணீர் வரத்து குறைவாக வரக்கூடிய நிலையில் உள்ளது.
எனவே, இந்த ஏரியை நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை நிர்வாகத்தினர், உரிய நடவடிக்கை எடுத்து ஏரியை தூர்வார நடவடிக்கை எடுத்தால் வரும் வடகிழக்கு மழைக்காலங்களில் தண்ணீர் நிரம்பி மதகு வழியாக புழல் ஏரிக்கு செல்லும் சூழ்நிலை உருவாகும். இதனால், புழல் ஏரியின் நீர்மட்டம் கிடு கிடுவென உயரம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு
புழல் ஏரியை சுற்றியுள்ள பம்மதுகுளம், இந்திரா நகர், கோணி மேடு, லட்சுமிபுரம், ஏறாங்குப்பம், பொத்தூர், கன்னடபாளையம், திருமுல்லைவாயல் ஒரகடம், பானு நகர், முருகம்பேடு, சூரப்பட்டு, மேட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து தண்ணீர் செல்லக்கூடிய வழி தடயங்களை சிலர் ஆக்கிரமித்து செய்துள்ளதால், ஏரிக்கு நீர்வரத்து வராமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. எனவே மேற்கண்ட பகுதிகளில் நீர்வளத் துறையினர் உடனடியாக ஆய்வு செய்து, ஏரிக்கு பின்புறம் உள்ள பகுதிகளில் வழக்கம்போல் தண்ணீர் வரும் பகுதிகளை ஆய்வு செய்து நீர்வழி தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைநீர் தடையின்றி வருவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



