திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்க கோரி உருவ பொம்மை பாடையை சாலையில் வைத்து பொதுமக்கள் நூதன போராட்டம்: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திருத்தணி, ஆக.28: திருத்தணி அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொன்பாடி பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் உருவ பொம்மை பாடையை சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கிராம மக்கள் சாலையை கடந்து செல்ல வசதியாக ஆங்காங்கே உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், திருத்தணி அருகே பொன்பாடி சுற்றுவட்டார கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலை கடந்து விவசாய நிலங்கள், இடுகாடு மற்றும் இதர பகுதிகளுக்கு செல்ல சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொன்பாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் உயர் மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி நேற்று காலை அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் உட்பட கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் சடலம் உருவ பொம்மையுடன் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் நூதன முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ராஜகோபால், திருத்தணி ஏஎஸ்பி ஷுபம் திமான், இன்ஸ்பெக்டர் சிவகுமார் உட்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரிகள் உயர் பாலம் அமைக்க உறுதி அளித்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தினர்.
உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பொன்பாடி பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் உறுதி கூறியதை ஏற்று சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டு திரும்பிச் சென்றனர். இரண்டு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தால், தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.



