Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பயிர்கடனை தள்ளுபடி செய்வதாக ஏமாற்றும் முதல்வரை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து விவசாயிகள் தர்ணா போராட்டம்: திருவள்ளூரில் பரபரப்பு

திருவள்ளூர், ஜூன் 26: முதல்வர் விஜய் தேர்தல் அறிக்கையின்போது தெரிவித்த தேர்தல் வாக்குறுதியின்படி, விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். உரம் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா தலைமையில் நேற்று காலை 11 மணியளவில் நடந்தது.

கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகளும் பங்கேற்றனர். கூட்டம் தொடங்கியவுடன் திடீரென விவசாயிகள், தொடர்ந்து விவசாயிகளை ஏமாற்றி வரும் தமிழ்நாடு முதல்வர் விஜய்யை கண்டித்து, விவசாயிகள் கருப்பு சட்டை அணிந்து கொண்டும், கையில் கருப்பு துண்டை கட்டிக் கொண்டும் மாவட்ட கவிதா மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு உயர் அதிகாரிகள் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டரின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் அனைவரும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.