Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முதல்வர் விஜய் படம் வைக்கக்கோரி திமுக கவுன்சிலர்களுடன், தவெக எம்எல்ஏக்கள் வாக்குவாதம்: திருவள்ளூர் நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு

திருவள்ளூர், ஜூன் 26: திருவள்ளூர் நகர்மன்ற கூட்டத்தில், முதல்வர் விஜய் படம் வைக்கக்கோரி திமுக கவுன்சிலர்களுடன், தவெக எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் முதல்வர் விஜய் படத்தை வைக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் எம்எல்ஏ டாக்டர் டி.அருண்குமார், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி எம்எல்ஏவுமான ஆர்.பிரகாசம் (எ) குட்டி மற்றும் தவெக கட்சியினர், நகராட்சி ஆணையர் தாமோதரனிடம், ஏற்கனவே நடந்த நகர்மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், திருவள்ளூர் நகர்மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முன்பு, தவெக எம்எல்ஏக்கள் திருவள்ளூர் டாக்டர் டி.அருண்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் ஆர்.பிரகாசம் (எ) குட்டி ஆகியோர் நுழைந்தனர்.

அப்போது, நகர மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் மற்றும் திமுக கவுன்சிலர்கள், அனுமதி இல்லாமல் எப்படி நகர்மன்ற கூடத்தில் நுழையலாம் என கேட்டு, சட்டமன்ற உறுப்பினர்களாக நகர்மன்ற கூட்டத்தில் தாங்கள் ஒரு பார்வையாளராக கலந்து கொள்ளலாமே தவிர, தங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நகர்மன்ற கூட்டத்தில் முதல்வர் புகைப்படம் வைக்க தீர்மானம் நிறைவேற்றினால் மட்டுமே, முதல்வர் படம் வைக்க முடியும் என்ற அரசாணையை காண்பித்தனர். இதனால், கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பரபரப்பாக காணப்பட்டது. பின்னர், கூட்டம் தொடங்கி காரசார விவாதம் நடைபெற்றபோது, இரு கட்சியின் எம்எல்ஏக்களும் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.