Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரயில்கள் நீண்ட நேரம் சிக்னல் கிடைக்காமல் நிறுத்தப்படுவதை தடுக்க அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடைமேடை நீட்டிப்பு, பராமரிப்பு பணிகள் தீவிரம்: இன்னும் ஓரிரு நாளில் ரயில் சேவை துவக்கம்

திருத்தணி, ஜூன் 26: அரக்கோணம் ரயில் நிலைய (ஜங்ஷன்) நடைமேடை நீட்டிப்பு மற்றும் யார்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், புறநகர் மின்சார மற்றும் அதிவிரைவு ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஊழியர்கள் பராமரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ரயில் சேவை இன்னும் ஒரிரு நாளில் தொடங்க வாய்ப்புள்ளது என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சென்னை- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் சிக்னல் கிடைக்காமல் ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனை தடுத்து காலதாமதமின்றி ரயில்கள் பயணிக்கும் வகையில், 24 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கும் வகையில் நடைமேடைகள் 3, 4 மற்றும் 5 ஆகியவற்றை நீட்டித்தல், புதிதாக 3 மற்றும் 4வது ரயில் பாதை அமைத்தல், யார்டு மேம்பாடு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக கடந்த 13ம் தேதி முதல் 26ம் தேதி (இன்று) வரை சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் 57 மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள், சென்னை - திருத்தணி, திருத்தணி - அரக்கோணம் இடையில் 2 மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டு, அரக்கோணம் ரயில் நிலையம் மற்றும் யார்டில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் யார்டு மேம்பாடு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், அரக்கோணத்திலிருந்து சென்னை செல்லும் மின்சார ரயில்கள் அனைத்தும் திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன. அரக்கோணம் பகுதி ரயில் பயணிகள் வசதிக்காக அரக்கோணத்திலிருந்து திருவாலங்காடு வரை 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான புறநகர் மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், அரக்கோணம் மற்றும் திருவாலங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் ரயில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

குறிப்பாக திருத்தணி, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் மலர் சாகுபடி செய்யும் வியாபாரிகள் ரயில்கள் மூலம் சென்னைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாலங்காடு வரை பேருந்துகளில் சென்று அங்கிருந்து ரயில்களில் சென்னைக்கு செல்ல வேண்டிய நிலையில், மலர்கள் வாடி வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ரயில் சேவை தடைபட்டுள்ளதால், திருத்தணி வழியாக சென்னைக்கு செல்லும் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

மேலும் திருத்தணியிலிருந்து திருவள்ளூர், சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் பெண்கள், முதியோர், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று (26ம் தேதி) மாலைக்குள் அனைத்து யார்டு மேம்படுத்தல் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணிகளை முடித்து வழக்கம்போல் அனைத்து புறநகர் மற்றும் அதிவிரைவு ரயில் சேவைகளும் இன்னும் ஓரிரு நாளில் தொடங்கப்படும் என்று சென்னை கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.