Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஊத்துக்கோட்டை அருகே சிட்ரபாக்கம் தடுப்பணை கரைகள் சேதம்

ஊத்துக்கோட்டை, மே 26: கடந்த வருடம் பெய்த மழையால் சேதமடைந்து காணப்படும் சிட்ரபாக்கம் தடுப்பணை கரைகளை விரைந்து சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியில் மழை காலங்களில் மழை நீர் நிரம்பியதும் தண்ணீர் திறக்கப்பட்டால் இந்த தண்ணீர் நாகலாபுரம், சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக சென்று பழவேற்காடு கடலில் கலக்கும். இவ்வாறு வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமித்து வைக்க, ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள சிட்ரபாக்கத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

மேலும், ஊத்துக்கோட்டை அதை சுற்றியுள்ள பகுதிகளான சிட்ரபாக்கம், அனந்தேரி, போந்தவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் நெல், கரும்பு, பூ செடிகள் என பல பயிர்கள் வைத்துள்ளனர். இவர்களின் நீர் ஆதாரத்திற்காக சிட்ரபாக்கம் பகுதியில் தடுப்பணை கட்டி நீரை தேக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன்படி, கடந்த 1989ம் ஆண்டு சிட்ரபாக்கம் பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டது. இதனால், அப்பகுதி விவசாயிகளும் பயனடைந்தனர். நாளடைவில் இந்த தடுப்பணை மழையால் சேதமடைந்தது.

பின்னர், கடந்த 2014-2015ம் ஆண்டு ரூ.3.42 கோடி செலவில் சிட்ரபாக்கம் பகுதியில் தடுப்பணையையும், கரைகளையும் பொதுப்பணித்துறையினர் புதுப்பித்தனர். இந்நிலையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட புயல், மழையால் சிட்ரபாக்கம் தடுப்பணை கரைகள் சேதமடைந்தது. தற்போது, தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே, மழைக்காலம் தொடங்கும் முன்பே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து சேதமடைந்துள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.