Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புழல் மகளிர் சிறைச்சாலை அருகே குடிநீர் வாரிய அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் காட்டு பன்றிகள்: அச்சத்தில் வாரிய ஊழியர்கள்

புழல், மே 26: புழல் மகளிர் சிறைச்சாலை அருகே குடிநீர் வாரிய அலுவலக வளாகத்தில் சுற்றித்திரியும் காட்டு பன்றி மற்றும் விஷ ஜந்துகளால் குடிநீர் வாரிய ஊழியர்கள் உயிர் பயத்தில் உள்ளனர். சென்னை புழல் மகளிர் சிறைச்சாலை அருகில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் 300 எம்எல்டி அலுவலகம் உள்ளது. இங்கிருந்து தண்ணீரை சுத்திகரிக்கப்பட்டு சென்னை கொளத்தூர், மாதவரம், கீழ்ப்பாக்கம், கெல்லீஸ், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் பூமிக்கு அடியில் செல்கிறது. இந்நிலையில், இங்கு நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு உள்ள வளாகத்தின் ஒரு பகுதியில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் மரங்கள் வளர்ந்து காடு போல் உள்ளது.

இந்நிலையில் இங்கு சுமார் 50 மேற்பட்ட காட்டு பன்றிகள் மற்றும் பல வகை பாம்புகள் சுற்றி திரிவதால் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இந்த பணியாற்றும் இரண்டு ஊழியர்களை காட்டு பன்றி தாக்கி முதுகெலும்பு கை கால்கள் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும் இதனால் வரை எந்தவித நடவடிக்கை எடுக்காமல் வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைத்துறை மற்றும் வனத்துறை உதவி உடன் இங்கு சுற்றித் திரியும் காட்டுப் பன்றிகளையும் பலவகை பாம்புகளையும் பிடித்து காட்டுப்பகுதியில் விடுவதற்கும் காடுகள் போல உள்ள மரங்களையும் ஒழுங்குப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை குடிநீர் வடிகல் வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கூறியதாவது: இங்கு பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். தற்போது, இந்த வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் மரங்கள் ஓங்கி வளர்ந்து காடு போல் உள்ளது. இதில், காட்டுப்பன்றிகள் மற்றும் பலவகை பிரிவைச் சேர்ந்த பாம்புகள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில், கோடை வெயில் என்பதால் வளாகத்தில் உள்ள காடுகளில் இருந்து பாம்புகள் பன்றிகள் வெளியேறி பணியாற்றும் எங்கள் பகுதிக்கு வந்து செல்கிறது. இதனால், நாங்கள் பயத்துடன் பணியாற்றி வருகிறோம். குறிப்பாக மின்விளக்கு வசதிகள் இல்லாததால் இரவு நேரங்களில் பணியாற்றும்போது சில நேரங்களில் பயத்துடன் பணியாற்றி வருகிறோம்.

மேலும், நுழைவு வாயிலிருந்து அலுவலகத்துக்கு செல்லும் சுமார் 600 மீட்டர் தூரத்தில் உள்ள சாலையில் இரண்டு பக்கங்களிலும் மின்கம்பங்கள் இல்லாமல் உள்ளதால் இரவு பணிக்கு செல்லும் போது பெரிதும் சிரமப்பட்டு சென்று வருகிறோம். இங்கே பாம்புகள், விஷப்பூச்சிகள் அதிக அளவில் நடமாட்ட இருப்பதால் அச்சத்துடன் சென்று வருகிறோம். எனவே, இது குறித்து பலமுறை எங்கள் அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் கண்டும் காணாமல் உள்ளனர்.

எங்களுடைய உயிருக்கு ஆபத்தான நிலையில் பணியாற்றி வருகிறோம். எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட சென்னை குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து காடு போல் வளர்ந்துள்ள மரங்களை ஒழுங்குப்படுத்தி இதில் உள்ள காட்டு பன்றிகள் மற்றும் பலவகை பாம்புகளை அப்புறப்படுத்துவதற்கும் ஊழியர்கள் செல்லும் சாலையில் மின் கம்பங்கள் அமைத்து மின்விளக்குகள் எரிய வைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.