ஊத்துக்கோட்டை அருகே மழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள்; தண்ணீரை வெளியேற்ற கோரி விவசாயிகள் சாலை மறியல் : ஊத்துக்கோட்டை அருகே பரபரப்பு
ஊத்துக்கோட்டை, அக்.23: போந்தவாக்கம் கிராமத்தில் நெல்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால், தண்ணீரை வெளியேற்ற முடியாமல் கடும் அவதியடைந்த விவசாயிகள் வெறியேற்ற நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் போந்தவாக்கம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் விவசாயிகள் வியாபாரிகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் சுமார் 94 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதில், எல்லாபுரம் ஒன்றியத்தில் மழை பெய்து நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. இதேபோல், பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்திலும் பல இடங்களில் நெல்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் நெல் பயிர்களில் மூழ்கிய தண்ணீர் வெளியேற வழியில்லாததால், அப்பகுதி விவசாயிகளும் பெண்களும் நெல்பயிரில் மூழ்கிய மழைநீரை அகற்றி அருகில் உள்ள கிருஷ்ணா கால்வாயில் விடவேண்டும் என கோரினர். அதற்கு கிருஷ்ணா நதிநீர் நீர்வளத்துறை அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த போந்தவாக்கம் பகுதி ஆறுவழிச்சாலையில் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த ஆறுவழிச்சாலை அமைக்கும் அதிகாரிகள் மற்றும் கிருஷ்ணா நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பவயிடத்திற்கு வந்தனர். அவர்களிடம், மழை பெய்து பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. அந்த நீரை அகற்றி கிருஷ்ணா கால்வாயில் விடவேண்டும். அப்போது தான் பயிர்களில் சூழ்ந்துள்ள மழைநீர் வடியும்.
மேலும், ஆறுவழிச்சாலை பணிகள் நடைபெறும் இடத்தில் கிராம மக்களாகிய நாங்கள் செல்வதற்கு வழி அமைத்து தரவேண்டும் என கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையறிந்த அதிகாரிகள் நடடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் போந்தவாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது: திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால், மழைநீர் குடியிறுப்புகளிலும் புகுந்தது. மேலும் அந்த மழைநீர் தற்போது போந்தவாக்கம் பகுதியில் உள்ள விவசாயிகள் வைத்துள்ள 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் மழைநீர் சூழ்ந்து நெல் பயிர்கள் மூழ்கியுள்ளது. இந்த மழைநீரை கிருஷ்ணா கால்வாயில் விட சம்மந்தப்பட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.


