Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஜிம் உரிமையாளரை மிரட்டி ஜிபே மூலம் ரூ.50,000 பறிப்பு: 10 திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு; போலீசார் விசாரணை

திருவள்ளூர், அக்.23: திருவள்ளூர் அருகே ஜிம் உரிமையாளரை மிரட்டி ஜிபே மூலம் ரூ.50,000 பறித்துச் சென்ற 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் `பியூஷன் 24 பிட்னஸ்’ என்ற புதிய உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா கடந்த 19ம் தேதி நடந்தது. விழாவிற்கு, அர்ஜூனா விருது பெற்ற பாடி பில்டிங் வீரர் பாஸ்கரன் உள்பட உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் வருகை தந்தனர். அப்போது உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள், ரூ.50 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே செல்வோம் எனக்கூறி அடாவடி செய்துள்ளனர். அவர்கள் கேட்ட பணத்தை கொடுக்க மறுத்த உரிமையாளர் மற்றும் விழாவிற்கு வந்திருந்த நபர்கள் திருநங்கைகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், திருநங்கைகளை வெளியே செல்லுமாறு கூறியும் செல்லாமல் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். 3 மணி நேரமாக உடற்பயிற்சி கூட உரிமையாளரை மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கி, ஒரு கட்டத்தில் அவரிடமிருந்து ரூ.50 ஆயிரம் ஜிபே மூலமாக பெற்று, அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். அதிர்ச்சியான உரிமையாளர், திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் 10 திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரக்கோரி புகார் அளித்தார். புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார், அச்சுறுத்தி பணம் பறித்தல், ஆபாசமாக பேசுதல், மிரட்டி பணம் பறிப்பது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் சுற்றுவட்டார பகுதியில் புதிதாக திறக்கப்படும் கடைகளுக்கு குழுவாக திருநங்கைகள் சென்று, அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்து மிரட்டி பணம் வசூலிக்கப்பட்டு வருவது தொடர்ச்சியாக இருந்து வருகிறது. அத்தகைய கடை உரிமையாளர்கள், காவல் நிலையத்தில் அவர்கள் மீது புகார் அளிக்க முன் வருவதில்லை என கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆயுத பூஜை பண்டிகை முன்னிட்டு பணம் வசூலிக்க கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்குள் அத்துமீறி குழுவாக திருநங்கைகள் நுழைய முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.