Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு புறம்போக்கு நிலத்தை சுடுகாடாக பயன்படுத்த எதிர்ப்பு; இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மாற்று இடம் தேர்வு செய்யப்படும்: அதிகாரிகள் உறுதி

திருவள்ளூர், மே 22: காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூர் ஒன்றியம் கிளாய் பகுதியை சேர்ந்தவர் சக்கரவரத்தி (44). இவருக்கு உளுந்தை செல்லும் நெடுஞ்சாலையில் கிளாய் ஊராட்சி எல்லைப்பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் அருகே சர்வே எண் 330/1 ல் அரசு மேய்க்கால் புறம்போக்கு வகைபாடு கொண்ட நிலத்தில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்துர் ஒன்றியம், உளுந்தை ஊராட்சிக்குட்பட்ட வடுகர் காலனி ஆதிதிராவிட மக்கள் இறந்தவர்களை புதைக்கும் சுடுகாடு பகுதியாக மாற்றி பயன்படுத்தி வந்தனர். அரசு புறம்போக்கு நிலத்தை சுடுகாடு பகுதியாக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக்கரவர்த்தி சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்து நீதிபதிகள் உடல்களை அகற்ற நடவடிக்கை வேண்டுமென திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்களுக்கு கடந்த 2025ம் ஆண்டு உத்தரவிட்டனர். ஆனால் 2 மாவட்ட கலெக்டர்களும், கோர்ட் உத்தரவை நிறைவேற்ற காலதாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து சக்கரவரத்தி நீதிமன்றத்தை அவமதித்தாக 2 கலெக்டர்கள் மீதும் கடந்த 2026 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தார். இதற்கு பெரும்புதுார் தாலுகா அதிகாரிகள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நிறைவடைந்தவுடன் உடல்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என நீதிமன்றத்திற்கு தகவல் அளித்து காலஅவகாசம் கேட்டனர். இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்ததாலோசித்து நேற்று 21ம் தேதி உடல்களை அகற்றி மாற்று இடத்தில் புதைக்க முடிவு செய்துள்ளதாக நீதிமன்றத்திற்கு தகவல் அளித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்று பெரும்புதுார் சப் - கலெக்டர் நல்லசிவன், வட்டாட்சியர் வசந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகணபதி, போலீஸ் டிஎஸ்பி கீர்த்திவாசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் பெரும்புதுார் போலீசார் உடல்களை அகற்ற வந்தனர். இதேபோல் திருவளளூர் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன், வட்டாட்சியர் எஸ்.பாலாஜி, கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, துணை வட்டாட்சியர் கவிதா, உளுந்தை கிராம நிர்வாக அலுவலர் குமரன், மப்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாபதி மற்றும் போலீசார், வருவாய்த் துறையினர் உடல்களை அகற்றும் பணி மேற்கொள்ள வந்தனர். அப்போது அங்கு வந்த ஆதி திராவிட இன மக்கள் உடல்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பெரும்புதுார் சப் - கலெக்டரும், திருவள்ளூர் வட்டாட்சியரும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடக்கம் செய்யப்பட்ட உடல்களை மற்றொரு பகுதியில் உள்ள சுடுகாடில் மறு நல்லடக்கம் செய்ய உள்ளோம் என தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உடல்களை அடக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் சமாதானப்படுத்தி 3 உடல்களை அகற்றும் பணி மேற்கொண்டனர். மேலும் வரும் காலங்களில் இறந்தவர்களை உடல்களை அடக்கம் செய்ய மாற்று இடம் தேர்வு செய்யப்படும் என உறுதி அளித்தனர். பிறகு மீட்கப்பட்ட உடல்களை அதே பகுதியில் 1.5 கி.மீ., துாரமுள்ள உள்ள மற்றொரு ஆதிதிராவிட சுடுகாடு பகுதியில் மறு நல்லடக்கம் செய்ய கொண்டு சென்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உடல்கள் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் சு.ரவிச்சந்திரன், வட்டாட்சியர் எஸ்.பாலாஜி மற்றும் மப்பேடு போலீசார் மறியிலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிப்பட்டது. தொடர்ந்து மீட்கப்பட்ட சடலங்களை சுடுகாடு பகுதியில் மறு நல்லடக்கம் செய்து விட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். இதனால் உளுந்தையில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.