திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையம்: செயல்பாட்டிற்கு கொண்டு வர பயணிகள் கோரிக்கை
திருவள்ளூர், செப்.21: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே காவலர்கள் இன்றி பூட்டியே கிடக்கும் புறக்காவல் நிலையத்தை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருவள்ளூரில் இருந்து சென்னை மார்க்கமாகவும் அரக்கோணம், திருத்தணி மார்க்கமாகவும் நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், ஊருக்கு செல்பவர்கள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து செல்கின்றனர்.
புறநகர் மின்சார ரயிலில் சென்னைக்கு சென்று, அங்கிருந்து வெளியூர்களுக்கு செல்பவர்களும் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோயம்புத்தூர், பெங்களூர், திருப்பதி, திருப்பத்தூர் உள்பட பிற மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் வந்து, நின்று செல்கின்றன. இதுபோன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் அதிகளவில் திருவள்ளூருக்கு வருகின்றனர்.
இதனால், திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களில் வருகின்றனர். இதனால், ரயில் நிலையம் அருகில் பரபரப்பான சூழ்நிலையை நிலவுகிறது. அதே நேரத்தில் ரயில்வே ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 200க்கும் மேற்பட்டோர் ஆட்டோக்களை ரயில் நிலையம் அருகில் நிறுத்தி வைத்து, பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். ஆனால் மற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் ரயில் நிலையத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் பெரியகுப்பம் பேருந்து நிறுத்தம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு செல்ல அனுமதிக்கும் நிலையில், ரயில் ஏறுவதற்காக அவசரமாக ரயில் நிலையம் அருகே ஆட்டோவில் வந்து விடுகின்றனர்.
இதனால் ரயில் நிலையம் அருகே காலை, மாலை வேலைகளில் ஆட்டோக்கள் வருகையால் நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும், அதனால் பாதிப்பும் ஏற்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில் அல்லது புறநகர் ரயிலை பிடிப்பதற்காக வரும் பயணிகள் போக்குவரத்து நெரிசல் காரணமாக ரயிலை தவற விட்டு சிரமத்திற்கு ஆளாவதையும் காணமுடிகிறது. தற்போது, திருவள்ளூர் ரயில் நிலையம் விரிவுபடுத்தப்பட்டு பல்வேறு விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புறக்காவல் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. அதில் காலை, மாலை வேலைகளில் காவலர்கள் பாதுகாப்பு பணியையும் போக்குவரத்தையும் சீர்படுத்தி வந்தனர்.
ஆனால், தற்போது காவலர்கள் யாரும் இல்லாததால் நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வரும் ரயில் பயணிகளிடம் வழிப்பறி, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல் இருசக்கர வாகனங்களை அவசரத்திற்கு நிறுத்திவிட்டு செல்பவர்கள் மீண்டும் திரும்பி வந்து பார்க்கும்போது அது காணாமல் போன நிகழ்வும் அடிக்கடி நடக்கிறது. எனவே, மாவட்ட காவல் துறை சார்பில் ரயில் நிலையம் அருகே உள்ள புறக்காவல் நிலையத்தில் நிரந்தரமாக ஒரு காவலரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், ரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


