விவசாயிகளுக்கு அரசு இலவசமாக வழங்கும் வண்டல் மண் வணிக ரீதியில் விற்பனை: தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனம்
திருத்தணி: அரசு விவசாயிகளுக்கு விளை நிலங்கள் சமன்படுத்தி பயிர் சாகுபடியை அதிகரிக்க ஏரி குளங்களில் வண்டல் மண் எடுத்து வணிக ரீதியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனம் போக்கில் உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளை நிலங்கள் சமன்படுத்தி பயிர் சாகுபடியை அதிகரிக்க ஏரி குளங்களில் வண்டல் மண் எடுக்க அரசு இலவச அனுமதி வழங்கியுள்ள நிலையில், சிலர் அதிகாரிகள் உதவியுடன் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தி பெரும் அளவில் லாபம் அடைந்து வருகின்றனர்.
விவசாய நிலங்கள் ஏரி, குளங்களில் இருந்து வண்டல் மண் இலவசமாக பயன்படுத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. விவசாயிகள் நில உரிமம் சான்று, அடங்கல் ஆன்லைன் மூலம் பதிவு செய்தால், வட்டாட்சியர் வண்டல் மண் எடுத்து பயன்படுத்த அனுமதி வழங்குகிறார். நீர்வளத்துறை, ஊராட்சி ஒன்றிய ஏரிகளில் அந்தந்த துறை பொறியாளர்கள் விவசாயிகளுக்கு மண் எடுக்க குறிப்பிடும் அளவு அனுமதி வழங்கிய பின்னர் பொக்லைன் மூலம் மண் எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது.
அரசு வேலை நாட்களில், வேலை நேரங்களில் மட்டுமே மண் எடுக்க அனுமதி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் ஆன்லைனில் அனுமதி பெற்று வண்டல் மண் எடுத்து விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி பயன் அடைந்து வருகின்றனர். இத்திட்டம் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கு வண்டல் மண்
திருவள்ளூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் வீட்டு மனை பிரிவுகளாக வேகமாக மாறி வருகிறது. மேலும் வணிக நிறுவனங்கள் கட்டிடங்கள் கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது. விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்ற முதலில் நிலத்தை சமன் செய்து வீட்டு மனை பிரிவுகளாக மாற்ற வேண்டும். இதற்கு மண் அதிக அளவில் தேவைப்படுகிறது. மேலும் வணிக நிறுவனங்களுக்கு, செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் தேவை அதிக அளவில் உள்ளது. அனுமதி பெற்ற கிராவல் மண் குவாரிகளில் இருந்து டிப்பர் லாரிகள் மூலம் அதிக பணம் செலுத்தி வாங்க வேண்டி உள்ளது.
அதே நேரத்தில் அரசு இலவசமாக விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளதால், விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி பெற்று ஏரிகளில் அனுமதிமீறி பெரிய அளவில் பொக்லைன்கள் வைத்து டிராக்டர்களில் மண் எடுத்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் 10க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண் எடுத்து செங்கல் சூளைகள், மனை பிரிவுகளுக்கு, வணிக வளாகங்கள் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். டிராக்டர் மண் ரூ. 3 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதால் பெரும்பாலானோர் வண்டல் மண் பயன்படுத்துகின்றனர். இதனால் வியாபாரிகள் குறிப்பிட்ட அளவு மீறி ஏரிகளில் பொக்லைன் மூலம் ஆழம் எடுத்து மண் எடுத்து அதிக அளவில் வருவாய் ஈட்டுகின்றனர்.
கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்
வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்படும் நபர்கள் முறையாக நிலத்திற்கு பயன்படுத்துகின்றனரா, வணிக பயன்பாட்டிற்கு செல்கிறதா என்று வருவாய்த்துறையினர் கண்காணிப்பை உறுதிப்படுத்தவும், அளவை மீறி மண் எடுப்பதை தடுக்க பொறியாளர்கள் அளவீடு செய்து கண்காணிக்க வேண்டும் என்று விவசாயி சாமுவேல் கோரிக்கை விடுத்தார். குறிப்பாக ஆர்.கே.பேட்டை அருகே ஆதிவராகபுரம் நீர்வளத்துறை ஏரியில் இருந்து தனி நபர் வணிக பயன்பாட்டுக்கு மண் பயன்படுத்தியதாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்
அனுமதி மீறி மண் கொள்ளை
விவசாயி ஒருவர் தனது நிலத்திற்கு வண்டல் மண் எடுக்க அனுமதி கோரி ஆன்லைனில் பதிவு செய்தால், நிலத்தின் பரப்பு வைத்து மண் எடுக்கும் அளவு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு 250 கன மீட்டர் மண் எடுக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஏரிகளில் பெரிய அளவில் பொக்லைன், ஒரே நேரத்தில் அதிக அளவில் டிராக்டர்கள் பயன்படுத்த கூடாது என்பது விதி. இருப்பினும் விதிகள் மீறி 100 யூனிட் வரை மண் என்ற அனுமதி மீறி 500 முதல் 1000 யூனிட் வரை எடுக்கப்படுகிறது. இதனால் ஏரியில் அதிக பள்ளம் எடுப்பதால், நிலத்தடி நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது. வண்டல் மண் எங்கு செல்கிறது என்பதை கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறையினர் மெத்தனம் காட்டுவதாகவும் , இதனால் இயற்கை வளம் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
அதிகாரிகள் மெத்தனம்
விவசாயிகள் பயன்பாட்டுக்காக அரசு இலவச அனுமதி கொடுக்கும் வண்டல் மண் சிலர் வணிக ரீதியில் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக திருத்தணி. ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் வீட்டுமனை பிரிவுகளுக்கு, செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. உரிய அனுமதி மீறி விடுமுறை நாட்கள், இரவு நேரங்களிலும் ஏரிகளில் இருந்து மண் அள்ளப்படுகிறது. இருப்பினும் முறையாக கண்காணிக்க வேண்டிய வருவாய்த்துறையினர் மெத்தனம் கடைபிடிப்பதாகவும், நேரடியாக வட்டாட்சியர் அனுமதி கொடுப்பதால், எந்த எந்த ஏரிகளில் வண்டல் மண் எடுக்கப்படுகிறது என்ற விவரங்கள் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முறையாக தெரிவிப்பதில்லை என்று வருவாய்த்துறையினர் குற்றம் சாட்டினர். அதேபோல் பொறியாளர்கள் குறிப்பிட்ட அளவு மீறி மண் எடுப்பதை உறுதிப்படுத்தவில்லை என்றும், இதனால் அதிக அளவில் மண் எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


