Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி காவல் நிலையம் அருகே சாலையோரம் நிறுத்தப்படும் பறிமுதல் வாகனங்களால் விபத்து அபாயம்

திருத்தணி, ஜூலை 20: திருத்தணி காவல் நிலையம் அருகில் சாலையோரத்தில் வரிசைகட்டி நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். திருத்தணியில் கன்னிகாபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் திருத்தணி காவல் நிலையம் அமைந்துள்ளது. அவ்வழியாக 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில் திருத்தணி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துகள் மற்றும் குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்படும் லாரிகள், டிராக்டர்கள், கார்கள், ஆட்டோக்களை போலீசார் காவல் நிலையம் அருகே கன்னிகாபுரம் சாலைக்கு இருபுறமும் நிறுத்தி வைக்கின்றனர்.

காவல் நிலையத்திற்கு இருபுறமும் வளைவு பகுதி வரை நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத வகையில் மறைக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அவ்வழியாக வேகமாக செல்லும் வாகனங்களால் கிராம மக்கள் விபத்தில் சிக்கும் நிலையில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே போலீஸ் பறிமுதல் செய்யும் வாகனங்களை சாலையில் நிறுத்தி வைப்பதை தடுத்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.