Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போரூர் அருகே 2 கடைகளில் பயங்கர தீ விபத்து

பூந்தமல்லி, மே 20: புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது மொய்தீன். இவர் போரூர்-குன்றத்தூர் சாலை எம்.எஸ்.நகர் பகுதியில் மரக்குடோன் நடத்தி வருகிறார். வீட்டிற்கு தேவையான கதவு, ஜன்னல், மற்றும் வாசக்கால் செய்து விற்பனை செய்து வருகின்றனர். இக்கடையில் 5க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து ஊழியர்கள் கடையை மூடிவிட்டு சென்று விட்டனர். நேற்று அதிகாலை கடையிலிருந்து அதிகளவில் புகை வெளியேறுவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மரக்கடை என்பதால் தீயானது வேகமாக கடை முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனிடையே, மரக்கடை அருகே இருந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான மின்சார பெட்டிகள் தயாரிக்கும் குடோனிலும் தீ பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த பூந்தமல்லி, கோயம்பேடு, விருகம்பாக்கம், வானகரம், மதுரவாயல் மற்றும் கிண்டி பகுதியில் இருந்து சுமார் ஆறு தீயணைப்பு வாகனங்களில் வந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. மின்கசிவு ஏற்பட்டு கடையில் தீ பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.மேலும், இச்சம்பவம் குறித்து போரூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து மரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.