Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ரேபிஸ் வைரஸ் தொற்று பரவுவதை தடுத்து நிறுத்த தெருநாய்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தும் பணி தீவிரம்

திருவள்ளூர், மே 20: திருவள்ளூர் அடுத்த காக்களூர், திருவூர் ஊராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் வைரஸ் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் முக்கிய சாலைகளில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. மாவட்ட தலைநகரான திருவள்ளூரில் இருந்து காக்களூர் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், முதியவர்கள், எங்கே நாய்கள் கடித்து விடுமோ என்ற அச்சத்தில் சாலையை கடந்து செல்கின்றனர். இந்நிலையில், காக்களூர் ஊராட்சியில் தெருநாய் ஒன்று சுற்றித்திரிந்து வந்த நிலையில், அந்த நாய்க்கு திடீரென வெறி பிடித்து சாலையில் செல்லும் நபர்கள், வீட்டில் இருந்த பெண்கள், முதியவர் என கண்ணில்படும் நபர்களை எல்லாம் விரட்டி விரட்டி கடித்தது.

இதில் திருவள்ளூர் நகராட்சி துப்புரவு பணியாளர் சரசு (47) என பெண்கள், முதியவர்கள் உட்பட 18க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதேபோல், நாய் கடித்து காயமடைந்த காக்களூர் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் (65), சுரேஷ் (42), ரவிக்குமார் (26), பாஸ்கர் (47), லோகநாதன் (60) உள்பட 18 பேரை, அப்பகுதி மக்கள் மீட்டு திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். புட்லூரில் 4 பேரை கடித்து குதறியது, காக்களூரில் 18 பேரை கடித்து குதறிய வெறி நாய், அங்கிருந்து புட்லூர் வழியாக திருவூர் கிராமத்திற்கு சென்று அங்கிருந்த பொதுமக்கள் 4 பேரை துரத்தி, துரத்தி கடித்தது. காயமடைந்த 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு திருவள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து பொதுமக்களை வெறிகொண்டு துரத்தி கடிக்கும் நாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், பாதிக்கப்பட்டவர்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை தொடரும்: கலெக்டர் தகவல்

திருவள்ளூர் அடுத்த காக்களூர் மற்றும் திருவூர் ஊராட்சி பகுதிகளில் தெருநாய் ஒன்று பொதுமக்களை கடித்ததாக நாளிதழில் வரப்பெற்ற செய்தியினை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் உத்தரவின்பேரில் கால்நடை பராமரிப்பு மண்டல இணை இயக்குநர் டாக்டர் டி.மோகன், உதவி இயக்குநர் டாக்டர் எஸ்.தாமோதரன், கால்நடை நோய் புலனாய் பிரிவு உதவி இயக்குநர் டாக்டர் சுபஸ்ரீ மற்றும் கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுவினருடன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) கே.எஸ்.யுவராஜ், நகராட்சி ஆணையர் ந.தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோ, ஜானகி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீராம் காந்தி, சுகுணா ஆகியோர் கூட்டாக பாதிக்கப்பட்ட பகுதிகளான காக்களூர், புட்லூர் ஊராட்சிகள் மற்றும் அருகில் உள்ள நகர பகுதிகளில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 75 தெருநாய்களுக்கு ரேபிஸ் எதிர்ப்பு வைரஸ் தொற்றைத் தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் மருந்து செலுத்தப்பட்டது. மேலும் திருவள்ளூர் நகாரட்சி அலுவலகத்தில் உள்ள மையத்தில் 10 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாநகராட்சி ஆணையர், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள், கால்நடை பராமரிப்பு இணை இயக்குநர், துணை இயக்குனர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள், நகராட்சி ஆணையர்கள், பேருராட்சிகளின் செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மற்றும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, தொடர்ச்சியாக அனைத்து பகுதிகளிலும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பு மருந்து மற்றும் பிறப்பு தடுப்பு நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.