Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் வீணாகி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

ஊத்துக்கோட்டை, மே 19: பெரியபாளையம் பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்டு 7 வருடங்களாக மூடியே கிடக்கும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் ஊராட்சியில், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, ஊரின் மையப்பகுதியில் பேருந்து நிலையம் உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் இங்குள்ள பவானி அம்மன் கோயிலுக்கு வந்து செல்வார்கள். அவர்கள் வெயில் காலத்தில் குடிதண்ணீர் இன்றி கடும் அவதிப்படுவார்கள். ஆகையால், பொதுமக்களின் நலன் கருதி சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பேரில், கடந்த 2018-2019ம் ஆண்டு அப்போதைய கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவாக இருந்த கே.எஸ்.விஜயகுமார் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6.50 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு 7 வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கவில்லை. மேலும், சுத்திகரிப்பு நிலையத்தை பயன்படுத்தாததால், அதில் உள்ள தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் மோட்டார் பழுதடைந்து விட்டது. எனவே, தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்கள் நலன் கருதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.