மாதவரம், ஆக.18: சென்னை கொளத்தூர் திருப்பதி நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அப்துல் மஜீத் (56). இவர், தனது மனைவி பதுல்லா பேகத்துடன், கடந்த மாதம் 26ம் தேதி இரவு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு திருப்பத்தில் பைக்கை திருப்பிய போது, மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.
இதில், அப்துல் மஜீத் மற்றும் அவரது மனைவி பதுல்லா பேகம் ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பதுல்லா பேகம் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அப்துல் மஜீத்துக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து நடந்த போது, அப்துல் மஜீத்தின் மனைவி பதுல்லா பேகம் வைத்திருந்த கைப்பை மாயமானது.
அதில் ரூ.30 ஆயிரம், 2 சவரன் செயின் மற்றும் ஒரு செல்போன் இருந்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்கு பிறகு, அப்துல் மஜீத் தற்போது கொளத்தூர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.விசாரணையில், விபத்து ஏற்படுத்திய பெரம்பூர் திருவிக நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் (24), அதே பகுதியை சேர்ந்த ரியாசுதீன் (19) ஆகியோர், படுகாயமடைந்த தம்பதியை மருத்துவமனையில் சேர்க்க உதவுவது ேபால் நடித்து, பதுல்லா பேகத்தின் கைப்பையை திருடிச் சென்றது தெரிந்தது. அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.




