திருத்தணி, ஆக.18: திருத்தணி முருகன் மலைக் கோயில், மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகள் மற்றும் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மேலும் பைக் இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்த சத்திய நாராயணன் (30) என்பவர் கடந்த 1ம் தேதி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய இருசக்கர வாகனத்தில் சென்றார். மலை கோயிலில் வாகன நிறுத்துமிடத்தில் பைக் நிறுத்தி விட்டு சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் அவர் வந்து பார்த்த போது பைக் திருடப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத்தில் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இதில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சரவணன் (25) என்பவரை பைக் திருடியது உறுதிப்படுத்தி அவரிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அவரை கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதேபோல் மத்தூரை சேர்ந்த பழனி(27) என்பவர் பிப்ரவரி மாதம் 24ம் தேதி மத்தூர் ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு வேலைக்கு சென்று திரும்பி வந்து பார்த்த போது பைக் திருடப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அவர் திருத்தணி காவல் நிலையத்தில் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்த நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு பைக் திருட்டில் ஈடுபட்ட பள்ளிப்பட்டு அருகே ராமாபுரம் காலனியைச் சேர்ந்த அல்லிமுத்து என்பவரின் மகன் அரவிந்த்(19) என்பவரை கைது செய்தனர்.



