Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்; நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இடைத்தரகர்கள் மூட்டைக்கு ரூ.40 வசூல்: தரையில் அமர்ந்து விவசாயி தர்ணா போராட்டத்தால் பரபரப்பு

திருத்தணி, அக்.17: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் போர்வையில் இடைத்தரகர்கள் மூட்டைக்கு 40 ரூபாய் வீதம் கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாகவும் தடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக குற்றம் சாட்டிய விவசாயிகள், கோட்ட அளவில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது. திருத்தணி கோட்ட அளவில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர் ராஜகோபால் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அதில் பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் தொடர்ந்து பங்கேற்காத துறை சார்ந்த அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கை ஏற்று கூட்டத்தில் பங்கேற்காத அலுவலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப கோட்டாசியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் திருத்தணி ஒன்றியத்தில் பீரகுப்பம், வேலஞ்சேரி, பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் நொச்சிலி, வடகுப்பம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் வீரமங்கலம், கொண்டாபுரம் ஆகிய பகுதிகளில் சொர்ணவாரி பட்டத்திற்கான அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூல் செய்வதை தடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் போர்வையில் இடைத்தரகர்கள் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைக்கு ரூ.40 வீதம் கட்டாய வசூல் செய்து வருகின்றனர். மேலும், வியாபாரிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதை தொடுக்க வேண்டிய அதிகாரிகள் அலட்சியமாக செயல்படுவதாக கூறி ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த ஜெகன் என்ற விவசாயி கூட்டத்தில் அலுவலர்களுக்கு முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.

திருத்தணி பகுதியில் தொடர்ச்சியாக விவசாயிகளிடமிருந்து முறைகேடாக பண வசூல் செய்து வருகின்றனர் என்று விவசாயிகள் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற நெல் கொள்முதல் அலுவலர் விளக்கம் அளிக்க கோட்டாட்சியர் கேட்டுக்கொண்டார். விவசாயிகளிடமிருந்து பணம் வசூல் செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளதாகவும் விசாரணை நடத்தி முறைகேடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நெல் கொள்முதல் அலுவலர் தெரிவித்தார். கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி, வட்டாட்சியர்கள் செந்தில்குமார், மலர்விழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.