Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

10 நாட்களுக்கு பின்பு ஏடிஎம் இயந்திரம் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் சிக்கினர்: தனிப்படை போலீசார் நடவடிக்கை

திருவள்ளூர், செப்.17: திருவள்ளூர் அடுத்த கூடப்பாக்கம், மேட்டு கண்டிகையில் ஹிட்டாச்சி எனப்படும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் ஒன்று வாடிக்கையாளர்களின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. கடந்த 5ம் தேதி காலையில் வாடிக்கையாளர்கள், ஏடிஎம்மில் பணம் எடுக்கச் சென்றனர். அங்கு, ஏடிஎம் இயந்திரம் இல்லாததை கண்டு வங்கிக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வங்கி மேலாளர் மற்றும் அலுவலர்கள் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஆவடி காவல் துறை துணை ஆணையர் வினோத் சாந்தராம், பூந்தமல்லி உதவி ஆணையர் அமீர் அகமது தலைமையிலான 10க்கும் மேற்பட்ட போலீசார் கூடப்பாக்கம், மேட்டுக் கண்டிகையில் உள்ள ஹிட்டாச்சி ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களுடன் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரித்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள்? எந்த வாகனத்தில் ஏற்றிச் சென்றார்கள் உள்ளிட்டவைகள் குறித்து மேட்டுக் கண்டிகை பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஏடிஎம் மிஷினில் ரூ.10 லட்சம் வரையிலான பணம் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளை அடித்தவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

திருவள்ளூர் மார்க்கத்திலும், பூந்தமல்லி மார்க்கத்திலும் இருந்த 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொண்டதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், கடந்த 5ம் தேதி அதிகாலை 2.54 மணியளவில் 6 பேர் கொண்ட கும்பல் கவ்பார் என்ற இரும்பு கம்பி உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்தெடுத்து, சடலங்களை ஏற்றி செல்லும் அமரர் ஊர்தி வேனில் எடுத்துச்சென்று அரண்வாயல் பகுதியில் செல்லும் கிருஷ்ணா கால்வாய் ஓரத்தில் அமரர் ஊர்தியை நிறுத்தி வைத்துவிட்டு, ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து அதில் இருந்த ரூ.10 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு ஏடிஎம் இயந்திரத்தையும், ஏடிஎம் மெஷின் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட அமரர் ஊர்தி வேனையும் அங்கேயே விட்டுவிட்டு 3 இருசக்கர வாகனத்தில் 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் தப்பிச்சென்று தலைமுறைவாகிவிட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, ஆவடி காவல் ஆணையரகத்தின் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையில் 38 போலீசார் கொண்ட 3 தனிப்படைகளை அமைத்து, கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை குழுவினர், உடைக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை மீட்டு பாதுகாப்பாக வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த வாகனம் திருவள்ளூர் நோக்கி சென்ற வழித்தடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் அந்த வாகனம் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி அருகே செல்லும் கிருஷ்ணா கால்வாய் அருகே ஆய்வு செய்தபோது ஏடிஎம் பாகங்கள் கிடந்ததை கண்டுபிடித்து மீட்டனர். மேலும் கொள்ளைக்கு பயன்படுத்திய  பெருமந்தூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தண்டலம் பகுதியில் அமரர் ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். சடலங்களை கொண்டு செல்லும் அமரர் ஊர்தி என்பதும், 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் அந்த அமரர் ஊர்தியை திருடி வந்து கொள்ளையில் ஈடுபட்டதும் போலீசாருக்கு தெரியவந்தது.

அமரர் ஊர்தியில் உள்ள எண்ணை கொண்டு போலீசார் தொடர்புகொண்டு விசாரித்ததில், அமரர் ஊர்தி வாகனம் காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியை சேர்ந்த உமாபதி என்பவருக்கு சொந்தமானது என்பதும், அந்த அமரர் ஊர்தியை அவர் மேற்கு தாம்பரம் கிஷ்கிந்தா சாலை ஓரத்தில் உள்ள சுடுகாடு ஓரத்தில் நிறுத்தி வைத்திருந்த வாகனத்தை திருடி வந்து ஏடிஎம் கொள்ளைக்கு பயன்படுத்தியதும் தெரியவந்துள்ளது. அமரர் ஊர்தி திருடுபோனது தொடர்பாக வாகன உரிமையாளர் உமாபதி, சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதும் உறுதியானது. அமரர் ஊர்தியை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளை அடித்துவிட்டு, பிறகு அமரர் ஊர்தியை நிறுத்தி வைத்துவிட்டு தப்பி ஓடிய கொள்ளையர்களை ஆவடி மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை குழுவினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 6 பேர் கொண்ட கும்பல், இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசாரின் தீவிர விசாரணையில், 10 நாட்களுக்குப் பிறகு கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து கொள்ளையர்கள் சமீம், சார்பாகான், ரசூல் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களை வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மறைமுகமான இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, பூந்தமல்லி அடுத்த நசரப்பேட்டையில் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரிடமும், ஆவடி காவல் ஆணையர் செந்தில் குமார், ஆவடி துணை ஆணையர் வினோத் சாந்தாராம் ஆகியோர், நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கொள்ளையர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அங்கிருந்து சென்றனர்.