Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

செங்குன்றத்தில் ரூ.3 கோடி மதிப்பில் தொடங்கிய நாளில் இருந்து மந்தகதியில் பேருந்து நிலைய பணிகள்; சாலையோரம் நிறுத்தப்படும் மாநகர பேருந்துகள்: போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகனங்கள்

புழல், செப்.17: செங்குன்றத்தில் ரூ.3 கோடி மதிப்பில் நடந்து வரும் பேருந்து நிலைய கட்டுமான பணி மந்தகதியில் நடைபெற்று வருகிறது. இதனால், சாலை ஓரங்களில் நிறுத்தப்படும் மாநகர பேருந்துகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செங்குன்றம் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து சென்னை வள்ளலார் நகர், தற்காலிக பேருந்து நிலையமான தீவுத்திடல், கோயம்பேடு, கிண்டி, தாம்பரம், அம்பத்தூர், பூந்தமல்லி, திருவள்ளூர், திருவொற்றியூர், பழவேற்காடு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, திருவொற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இங்கிருந்து தினசரி 100க்கும் மேற்பட்ட சென்னை மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த பேருந்து நிலையத்தில் பேருந்து நிலையத்தில் தினசரி 1000க்கும் மேற்பட்ட பயணிகள் மழை மற்றும் வெயில் காலங்களில் நின்று பயணித்து வந்தனர். இதனால் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், செங்குன்றத்தில் பழைய பேருந்து நிலையத்தை அகற்றிவிட்டு, புதிதாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பாதிப்புக்குள்ளான பயணிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், தமிழ்நாடு அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியின்போது செங்குன்றம் பேரூராட்சி சார்பில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டது, பின்னர், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்காக பூமிபூஜை நிகழ்ச்சி பேருந்து நிலைய வளாகத்தில் நடந்தது.

பணிகள் தொடங்கி நடந்து வந்த நிலையில், செங்குன்றம் பேரூராட்சி சார்பில் கூடுதல் நிதியாக 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலைய கட்டுமான பணி 6 மாதத்துக்குள் முடிக்கப்படும் என அப்போது பணியில் இருந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனால், சட்டமன்ற தேர்தல் அறிவித்திருந்த நிலையில் பணிகள் எதுவும் நடைபெறாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் நடைபெற்று 5 மாதம் ஆகியும், இதனால் கட்டுமான பணிகளும் மந்தகதிலேயே நடைபெற்று வருகிறது. இதனால், இங்கு வர வேண்டிய மாநகர பேருந்துகள் அருகிலுள்ள ஜிஎன்டி சாலையின் இரண்டு பக்கங்களிலும் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து, ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து மந்தகதியில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பேருந்து பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், செங்குன்றம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவள்ளூர் கூட்டு சாலை நேதாஜி சிலை வரை உள்ள ஜிஎன்டி சாலையின் இரண்டு பக்கங்களிலும் மாநகரப் பேருந்துகள் சாலை விதிமுறைகளை மீறி பேருந்துகள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சாலை வழியாக செல்லும் மற்ற வாகனங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து செங்குன்றம் போக்குவரத்து துறை சார்பில் பல பேருந்துகளுக்கு அபராத விதிக்கப்பட்டு, வருகிற சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் மாநகர போக்குவரத்து ஓட்டுநர்கள் மீண்டும் சாலை விதிமுறைகளை மீறி சாலைகளின் இரண்டு பக்கங்களிலும் நிறுத்தி வைத்து வருகின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மாநகர போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மாநகரப் பேருந்துகளை புழல் ஏரி மதகு அருகே உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.