Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சுதந்திர நாளில் விடுமுறை அளிக்காத 61 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

திருவள்ளூர், ஆக. 17: சுதந்திர நாளில் விடுமுறை அளிக்காத 61 நிறுவனங்கள் மீது தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை, சிறப்பு விடுமுறைகள் சட்டம் 1958ம் வருடம் மற்றும் விதிமுறைகளின்படி தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் வீரராகராவ், தொழிலாளர் ஆணையர் வள்ளலார் ஆகியோர் உத்தரவின் பேரில் சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் லட்சுமிகாந்தன், தொழிலாளர் இணை ஆணையர் - 2 சுமதி ஆகியோர் அறிவுறுத்திருந்தனர்.

அதன்பேரில், திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சாந்தி தலைமையில் தேசிய பண்டிகை விடுமுறை தினமான சுதந்திர தினத்தன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கூட்டாய்வு மேற்கொண்டனர்.இதில் 1958ம் வருடம் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய பண்டிகை, சிறப்பு விடுமுறைகள் சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமலும், முறையாக விதிமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்ட 61 நிறுவனங்கள் கண்டறியப்பட்டது. இந்நிலையில் முரண்பாடு காணப்பட்ட நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சாந்தி கூறுகையில், தேசிய விடுமுறை தினங்களில் தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு அன்றைய தினத்தில் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது வேறு தினத்தில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும்.  அவ்வாறு இல்லாமல் இது குறித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்திய நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்து இவ்வாறு கூறியுள்ளார்.