Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பால இணைப்புகளில் பள்ளம்: மின் விளக்குகள் இல்லாமல் வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் அவதி

ஊத்துக்கோட்டை, ஜூலை 17: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் இணைப்பு பகுதிகளில் பயங்கர அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும், மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மேம்பாலத்தில் பள்ளத்தைசீரமைக்கவும், மின் விளக்கும் பொருத்தவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஊத்துக்கோட்டை - திருவள்ளுர் நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டையில் ஆரணியாற்றின் குறுக்கே ₹27 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலப்பணிகள் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதத்தில் கட்டுமான பணிகள் தொடங்கி, 2021ம் ஆண்டு முடிவடைந்தது. இந்த பாலத்தில், ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள தாராட்சி, பாலவாக்கம், பேரண்டூர், பனப்பாக்கம், சூளைமேனி பகுதிகளை சேர்ந்த மக்கள் திருவள்ளூர் செல்வதற்கும், அனந்தேரி, போந்தவாக்கம், பெரிஞ்சேரி, மேலக்கரமனூர், வடதில்லை, மாம்பாக்கம் என 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், ஊத்துக்கோட்டை அருகில் உள்ள கிராமங்களான அனந்தேரி, மேலக்கரமனூர், பேரிட்டிவாக்கம் போன்ற கிராம மக்கள் பேருந்து வசதி இல்லாததால் நடந்தும், சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் ஊத்துக்கோட்டைக்கு வந்து தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிச்செல்கிறார்கள். அவ்வாறு அவர்கள் வந்து செல்லும் போது இந்த மேம்பாலத்தை தான் பயன்படுத்த வேண்டும். அவர்கள் இரவு நேரத்தில் பாலத்தின் மீது இருளில் செல்கிறார்கள். அப்போது, சாலை விரிசல் காரணமாக ஏற்பட்டுள்ள பள்ளத்தில் விழுந்து எழுந்து செல்லும் அவலமும் காணப்படுகிறது. இதனால், அவர்களுக்கு சிறிய காயம் முதல் பெரிய அளவிலான காயம் வரை ஏற்படுகிறது. வாகனங்களும் சேதம் ஏற்படுகிறது. இதனால், பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கு தேவையில்லாத செலவும், நேரம் விரயமாகி வருகிறது.

எனவே, பாலத்தின் மீது இருபுறமும் மின் விளக்குகள் பொருத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதற்கு 15 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். ஆனால், இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், பாலத்தின் இணைப்பு பகுதியில் ஆங்காங்கே விரிசல் மற்றம் பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் பாலத்தின் ஓரத்தில் மண் திட்டுக்கள் ஏற்பட்டுள்ளது. எனவே, இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்தும், மேம்பாலத்தில் மின் விளக்குகள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.