Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் இருந்து தமிழகத்திற்கு 313 கன அடி கிருஷ்ணா தண்ணீர் வருகை

ஊத்துக்கோட்டை, ஜூலை 17: ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லைக்கு 313 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

இந்நிலையில், கண்டலேறு அணையில் 2வது தவணை தண்ணீர், கடந்த மார்ச் மாத இறுதியில் திடீரென நிறுத்தப்பட்டது. 4 டிஎம்சி வரவேண்டிய தண்ணீர் 1 டிஎம்சி மட்டுமே வந்தது.இந்நிலையில், மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட தண்ணீர் கண்டலேறுவில் இருந்து மீண்டும் வினாடிக்கு 1900 கன அடி வீதம் மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் கடந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டிற்கு கடந்த மே மாதம் 28ம் தேதி வந்தடைந்தது. ஜீரோ பாயிண்டில் தொடக்கத்தில் வினாடிக்கு 50 கன அடியாக வந்த தண்ணீர் பின்னர் படிப்படியாக உயர்த்தப்பட்டு 280 கனஅடியாக வந்தது. பின்னர் ஜூன் மாதம் 30ம் தேதி வரை 2ம் தவணை முடிவடைந்த நிலையில் தமிழகத்திற்கு 737 மில்லியன் கன அடி தண்ணீர் வந்துள்ளது. இந்நிலையில், இந்த தண்ணீர் தொடர்ந்து வருவதால் ஜூலை முதல் அக்டோபர் வரை திறக்க வேண்டிய தண்ணீரை முதல் தவணையாக கணக்கில் கொண்டு கடந்த 1ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று வரை 324 மில்லியன் கன அடி தண்ணீர் வந்துள்ளது. தற்போது, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 313 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.