ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி அருகே பெத்திகுப்பத்தில் இலவச பேருந்து பயணத்தை ரத்து செய்யக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
கும்மிடிப்பூண்டி, அக்.16: கும்மிடிப்பூண்டி ஒன்றியம் பெத்திகுப்பம் பகுதியில் ஷேர் ஆட்டோ ஒட்டுநர்கள் சங்கம் சார்பில் கும்மிடிப்பூண்டி பஜார், எளாவூர், சாமிரெட்டி கண்டிகை, மாதர்பாக்கம், ரெட்டம்பேடு, புதுவாயில், கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலமாக பள்ளி-கல்லூரி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் ஷேர் ஆட்டோக்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக தவெக அரசு வெற்றி பயணம் திட்டம் முலம் அனைத்து பொதுமக்களும் இலவச பேருந்தில் பயணம் செய்வதால் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் வருமானம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். ஆட்டோக்களுக்கு மாதத்தவணை செலுத்த முடியாமல் நிதி நெருக்கடியால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்ந்நிலையில், பெத்திகுப்பம் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் இலவச பேருந்து பயணம் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 150 ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் வருமானமின்றி பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர். ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் தவெக அரசை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தவெக அரசு அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச வெற்றி பயண திட்டத்தை கடந்த அக்டோபர் 2ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், வெற்றி பயண திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தமிழகம் முழுவதும் இலவச பேருந்துகளை இயக்கி ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வை அழிக்கும் இலவச பேருந்து திட்டத்தை கைவிடக்கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை விஏஒ அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஊத்துக்கோட்டை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க தலைவர் தியாகு தலைமை தாங்கினார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் காட்டய்யன் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு மோட்டார் வாகன சட்டத்தை கொண்டு வந்ததால் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகிறோம்.
மேலும் தவெக அரசு வருகின்ற 31ம் தேதிக்குள் இலவச பேருந்து பயண திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிடுவோம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர். இதே போல் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சங்க தலைவர்கள் சுகுமார், தீபன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் நேற்று காலை முதல் ஆட்டோக்கள் ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


