Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்தணி அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு: விவசாயிகள் குற்றச்சாட்டு

திருத்தணி, ஜூன் 16: திருத்தணி அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திருத்தணி அருகே கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிருஷ்ணசமுத்திரம், சூரியநகரம், புச்சிரெட்டிப்பள்ளி, சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பெயர்கள் பதிவு செய்து நெல் அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், அந்த மையத்தில் பதிவு செய்த விவசாயிகள் நெல் அறுவடை செய்து டிராக்டர்களில் எடுத்து சென்று 2 மாதங்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் டிராக்டர்களில் நெல் மூட்டைகள் தேக்கி வைத்து காத்திருப்பதாகவும், மூப்பு அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் முகமது இல்யாஸ் கூறி வருவதாகவும், அதே நேரத்தில் நெல் வியாபாரிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் மட்டும் உடனடியாக கொள்முதல் செய்து வருவதாக சூரிய நகரம் சேர்ந்த பெண் விவசாயி கலாவதி குற்றம் சாட்டினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி முறைகேடாக கொள்முதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தி முறையாக பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விவசாயிகள் குற்றச்சாட்டு குறித்து நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் கூறுகையில், ‘நெல் கொள்முதல் நிலையத்திற்கு வாகனங்கள் வந்து செல்ல வசதி இல்லாததால் மூன்று மாதங்களாக கிடங்கில் 4 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி நிற்கிறது. இதனால் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது’ என்றார்.