Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திடீர் மின்வெட்டால் பொதுக்கூட்டம் பாதியில் நிறுத்தம்; தவெக அரசுக்கு எதிராக செல்போன் ; லைட் அடித்து திமுகவினர் கண்டனம்

ஆவடி, ஜூன் 16: திடீர் மின்வெட்டால் பொதுக்கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், தவெக அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக செல்போன் டார்ச் லைட் அடித்து திமுகவினர் கண்டனம் தெரிவித்தனர். சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தெற்கு பகுதி சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் அம்பத்தூர் பாடியில் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சேகர்பாபு, மாநில மருத்துவர் அணி செயலாளர் எழிலன், திராவிடர் கழக துணை பொது செயலாளர் மதிவதனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தற்போதைய அரசு நிதி அயோக் கூட்டத்தில் மாநில சுயாட்சி என்ற உணர்வோடு செல்லவில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் புதிய திட்டங்கள் தொடங்குவது தொடர்பாகவும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது தொடர்பாகவும், எதுவும் பேசாமல் நம்முடைய தலைவர் செய்தவற்றையே அங்கு கிளிப்பிள்ளை போல் ஒப்பித்துவிட்டு வந்துள்ளார். இதனால் தமிழ்நாட்டை ஸ்டாலின் தான் ஆளுகிறார் என்று மீண்டும் சொல்லுகிறோம், என்றார். அப்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. அரைமணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாததால் நிகழ்ச்சியை முடித்தனர். அப்போது, பொதுமக்கள் தங்களது செல்போன்களில் உள்ள டார்ச் லைட்களை ஆன் செய்து அரசுக்கும், முதலமைச்சருக்கும் எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தமிழ்நாடு முழுவதும் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ இன்று இதே மேடையில் நடந்து சான்றாக உள்ளது. நாங்கள் ஒரு மணி நேரம் மேடையில் சொல்ல வேண்டிய கருத்தை இந்த மின்வெட்டு நாட்டு மக்களுக்கு உணர்த்தி உள்ளது. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும். நடைமுறையில் என்ன இருக்கிறது என்பதை மின்வெட்டு காட்டுவதாக உள்ளது, என்றார்.