ஊத்துக்கோட்டை, அக். 15: வெள்ளியூர் அரசு சமூக நீதி பள்ளி மாணவர் விடுதியின் நுழைவுவாயில் பகுதி சுற்றுச்சுவர் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே வெள்ளியூர் ஊராட்சியில் திருவள்ளூர்-தாமரைப்பாக்கம் நெடுஞ்சாலையில் அரசு சமூக நீதி பள்ளி மாணவர் விடுதி உள்ளது. இதில் வெள்ளியூர், கரிகலவாக்கம், தாமரைப்பாக்கம், அமணம்பாக்கம், மாகரல், கன்னிகாபுரம், சேத்துப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.
இந்த மாணவர் விடுதியை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. விடுதி சுற்றுச்சுவரின் நுழைவு வாயில் பகுதி உடைந்து சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வெள்ளியூர் கிராமத்தில் உள்ள சமூகநீதி மாணவர்கள் விடுதி சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த மாணவர்கள் விடுதியை சுற்றி கட்டப்பட்டுள்ள காம்பவுண்டு சுவர் முகப்பு பகுதியில் சேதமடைந்துள்ளது. இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறவும் வாய்ப்புள்ளது. மேலும் விடுதி முன்பு புதர்கள் மண்டி காணப்படுகிறது.
எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் காம்பவுண்டையும், புதர்களையும் சீரமைத்து தர வேண்டும் என்றனர்.


