Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருவேற்காட்டில் நண்பரை தாக்கியதால் ஆத்திரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 2 வாலிபர்கள் கைது

பூந்தமல்லி, அக்.15: திருவேற்காடு அடுத்த கீழ் அயனம்பாக்கம் பொன்னியம்மன் நகர் காமராஜர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஈசாக்(எ) ராஜ்குமார்(28). இவர் கார்பென்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு மதுப்பழக்கம் இருப்பதால் அவரது மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஈசாக் மதுபோதையில் வீட்டின் அருகே உள்ள கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கீழ் அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(22), என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். போதையில் இருந்த ஈசாக் அவரை அழைத்து பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியானது. இதில், ஈசாக் சரமாரியாக தாக்கியதில் ஆகாஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து காயங்களுடன் சென்ற ஆகாஷ் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான சாலமன்(25), ராமச்சந்திரன்(26) ஆகியோரிடம் தன்னை ஈசாக் தாக்கியதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் இரண்டு பீர் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி ஈசாக் வீட்டின் மீது வீசினர். இதில் பெட்ரோல் குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி வீட்டின் வெளியே முன்பகுதியில் இருந்த வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்தது. இதையடுத்து இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதற்கிடையே வெடி சத்தம் கேட்டு ஈசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து திருவேற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்குச் வந்த திருவேற்காடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். போலீசாரின் விசாரணையில் ஆகாஷை தாக்கியதால் அவரது நண்பர்களான சாலமன், ராமச்சந்திரன் ஆகியோர் ஈசாக் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து, முகப்பேர் பகுதியில் பதுங்கி இருந்த சாலமன், ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.