Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ஆந்திராவில் இருந்து திருவள்ளூருக்கு காரில் கடத்தி வரப்பட்ட 140 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

திருவள்ளூர், அக்.14: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்படுவதாக தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார்கள் வந்தது. அதனடிப்படையில், மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் உத்தரவின்பேரில், போலீசார் தமிழக ஆந்திர எல்லைப் பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருப்பாச்சூரில் போலீசார், நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம், நகரியில் இருந்து திருவள்ளூர் நோக்கி வந்த காரை மடக்கி சோதனை செய்ததில், காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 140 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் வைத்திருப்பதை கண்டறிந்தனர்.

பின்னர், காரில் இருந்த 2 பேரை கைது செய்து, போலீசார் நடத்திய விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரேம்குமார் (40), கோவை மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் (45) என்பதும், இவர்கள் 2 பேரும் ஆந்திர மாநிலம், நகரில் இருந்து செங்கல்பட்டுக்கு குட்கா, புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து சுமார் 140 கிலோ குட்கா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான பிரேம்குமார், இளங்கோவன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பைக்கில் கடத்தப்பட்ட 50 கிலோ குட்கா பறிமுதல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் தாசுகுப்பம் பகுதியில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை பைக்கில் கடத்தி செல்வதாக பென்னலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ஒதப்பை பெட்ரோல் பங்க் அருகே நேற்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த பைக்கை மடக்கி சோதனை செய்தனர். அதில், 50 கிலோ குட்கா பொருட்கள் இருப்பதை அறிந்த போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர், கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில், அவர் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தை சேர்ந்த தர் (56) என தெரிந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.