Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நண்பரை வெட்டியதால் பழிக்கு பழியாக வாலிபர் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை : நண்பர்கள் நான்கு பேர் கைது

பொன்னேரி, ஜூலை 13: பொன்னேரியில் துக்க நிகழ்ச்சியில் நண்பரை வெட்டியதால் பழிக்கு பழியாக வாலிபர் முகம் சிதைக்கப்பட்டு படுகொலை செய்த நண்பர்கள் நான்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பொன்னேரி குன்னமாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தேவன். இவரது மகன் சுனில் (27). இவர், நேற்றுமுன்தினம் இரவு ஆரணியாற்று பாலத்தின் கீழ் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனே பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டு கிடந்த சுனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழன்பன் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு சின்னக் காவனம் பகுதியில் நடந்த துக்க நிகழ்வில் தகராறு ஏற்பட்டு தீபன் (24) என்பவரின் நண்பர்களை சுனில் கத்தியால் வெட்டியுள்ளார். இதற்கு பழி தீர்ப்பதற்காக தீபன் மற்றும் அவரது நண்பர்கள் சுனிலை கொலை செய்ய திட்டமிட்டனர். மேலும், சுனிலும் இவர்களது நண்பர்கள் என்பதும் குறிப்பிடதக்கது. இந்நிலையில், சம்பவத்தன்று முன்விரோதத்தை மறந்ததாக நைசாக பேசி மதுஅருந்த சுனிலை அழைத்து சென்றனர். பின்னர், மதுபானம் வாங்கிகொடுத்து போதை தலைக்கேறியதும் சுனிலின் முகத்தை கத்தி மற்றும் கற்களால் சிதைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் பொன்னேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து போலீசார் இந்த கொலையில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், பிரபல வழக்கறிஞர் மூலம் பொன்னேரி காவல் நிலையத்தில் நேற்று மதியம் இந்த கொலைக்கு காரணமான தீபக் (26), ஆதவன் (26), மணி (28) தங்கவேல் (28) ஆகிய நான்கு பேரும் தாங்கள் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு போலீசாரிடம் சரணடைந்தனர். போலீசார் இவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.