திருத்தணி,செப்.11:திருவாலங்காடு பகுதியில் குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், பொதுமக்களுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது. திருவாலங்காடு காவல் எல்லைப் பகுதியில் ஏராளமான கிராம பகுதிகள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் விவசாயம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி குடும்ப வாழ்வாதாரம் பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திருவாலங்காடு பகுதியில் கொலை, பூட்டிய வீடுகள் நோட்டமிட்டு கொள்ளை, தனியாக வசிக்கும் பெண்கள் வீடுகளிலும், அம்மன் கோயில்களிலும் திருட்டு, வழிப்பறி போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, ஆந்திர மாநிலம் நகரி பகுதியில் எளிதில் கிடைக்கும் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை எல்லை கிராமங்களில் சென்று திருவாலங்காடு வழியாக அரக்கோணம், திருவள்ளூர், சென்னை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு கடத்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். போலீசார் பெரிய அளவில் சோதனையில் ஈடுபடாததால் எளிதில் போதை பொருட்களை கடத்துவது, வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்படும் பைக்குகள், வீடுகளுக்கு அருகில் கட்டப்படும் கால்நடைகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு பழையனூர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் பூட்டை உடைத்து முட்டை. சமையல் எரிவாயு சிலிண்டர் திருட்டு சம்பவம் நடைபெற்றது. புகார் பதிவு செய்தும் குற்றவாளிகளை கைது செய்வதில் போலீஸ் தயக்கம் காட்டுவதாகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதில் போலீசார் முனைப்பு காட்டாததால், தொடர்ந்து குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இரவு நேரங்களில் பயணம் செய்யவும், வீடுகளை பூட்டிக் கொண்டு வெளியூர் செல்ல முடியாத நிலையில் உள்ளதால் பொதுமக்கம் அச்சம் அடைந்துள்ளனர்.


