Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அரிசி விலை உயர்வு எதிரொலி; நெல் கொள்முதல் விலையை திடீரென உயர்த்திய வியாபாரிகள்: தனியாரிடம் நெல் விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம்

திருத்தணி: அரிசி விலை திடீர் உயர்வு எதிரொலியாக, வியாபாரிகள் நெல் கொள்முதல் விலையை உயர்த்தியதாலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதால் பெரும்பாலான விவசாயிகள் வியாபாரிகளுக்கு அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, திருவாலங்காடு, பூண்டி, கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நெல் பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏப்ரல் மாதம் சொர்ணவாரி பட்டத்திற்கான நாற்று நடவு செய்தனர். மேலும் மாவட்டம் முழுவதும், 62500 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜூலை இறுதி வாரத்திலிருந்து சொர்ணவாரி பட்டத்தில் நெல் அறுவடை தொடங்கி ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல் அறுவடை செய்தனர்.

கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால், அரசு கொள்முதல் விலைக்கு இணையாக தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதால் பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல் விற்பனை செய்து வருகின்றனர். அரசின் உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை பொறுத்தவரை 1.9.26 முதல் 80 கிலோ கொண்ட சன்ன ரகம் நெல்லுக்கு ரூ.2200, குண்டு ரகம் பொறுத்தவரை ரூ.2125 அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அரிசி விலை உயர்ந்துள்ள நிலையில் தனியார் வியாபாரிகள் நெல் கொள்முதல் விலையை உயர்த்தி நேரடியாக விவசாயிகளை அணுகி விளை நிலங்களுக்கு வாகனங்கள் எடுத்துச் சென்று நெல் கொள்முதல் செய்கின்றனர். தனியார் வியாபாரிகள் பொறுத்தவரை 80 கிலோ எடை கொண்ட சன்ன ரகம் ரூ.1750 முதல் 2300 வரை கொள்முதல் செய்கின்றனர். குண்டு ரக நெல்லுக்கு ரூ.1450 முதல் 1650 வரை கொள்முதல் செய்கின்றனர்.

இந்நிலையில், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பொருத்தவரை சொர்ணவாரி பட்டத்தில் 50 பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செப்.1ம் தேதி திறந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை. கடந்த காலங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து மூட்டைக்கு ரூ.40 முதல் 50 வரை அரசியல் கட்சிகளில் பிரமுகர்கள் வசூல் செய்ததாக தொடர் புகார்கள் சென்றதால், விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளுக்கு பணம் வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.

இதனால், விவசாயிகளிடமிருந்து நெல் பிடித்தல், கோணிப்பையில் மூட்டைகள் எடை போட்டு சேமித்து வைத்து வாகனங்களில் ஏற்றி எடுத்துச் செல்ல என கூலி நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கு கணிசமாக செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. தற்போது அதற்கு அரசு தடை விதித்துள்ளதால் கூலி ஆட்களுக்கு கூலி வழங்குவது. லாரிகளுக்கு பேட்டா, வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலைய எழுத்தர்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் சந்திக்கும் பாதிப்பு

விவசாயிகள் நேரடியாக விளை நிலங்களில் முன்பதிவு செய்து அறுவடை செய்த நெல், கூலி ஆட்கள் வைத்து ஈரப்பதம் 17 சதவீதத்திற்கும் மேல் இருக்க கூடாது. உலர்த்திய நெல் கோணிப்பைகள் விவசாயிகள் பணம் கொடுத்து வாங்கி நெல் மூட்டை தைத்து வாகனங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு மூட்டை ஒன்றுக்கு ரூ.40 முதல் 50 வரை கமிஷன் கொடுக்க வேண்டும். லாரிகள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டால் வாகனங்களில் நெல் மூட்டைகள் காத்திருக்க வேண்டும். மழை வந்தால் நெல் மூட்டைகள் நணைந்து வீணாகும் பாதிப்பை விவசாயிகள் சந்திக்க வேண்டும்.

திறக்கப்படாத கொள்முதல் நிலையங்கள்

ஜூலை மாதம் இறுதி வாரத்தில் சொர்ணவாரி பட்டம் நெல் அறுவடை தொடங்கியது. ஆகஸ்ட் மாதத்தில் பெரும்பாலான விவசாயிகள் நெல் அறுவடை செய்தனர். அந்த காலகட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் தனியாரில் விலை கிடைப்பதால் பெரும்பாலான விவசாயிகள் வியாபாரிகளுக்கு நெல் விற்பனை செய்கின்றனர். தற்போது, மிக குறைந்த அளவில் விளை நிலங்களில் மட்டுமே அறுவடைக்கு நெல் தயார் நிலையில் உள்ளது. ஒரு சிலர் மட்டுமே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய அறுவடை செய்த நெல் வீடுகளில் மூட்டைகளாக தேக்கி வைத்துள்ளனர்.

வியாபாரிகளுக்கு விற்றால் செலவு குறைவு

கடந்த காலங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கப்படும் விலை விட தனியார் வியாபாரிகள் குறைவாக கொடுத்ததால் பெரும்பாலான விவசாயிகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டினர். இந்த ஆண்டு அரிசி விலை உயர்ந்துள்ளதால், தனியார் வியாபாரிகள் நெல் விலை 80 கிலோ மூட்டைக்கு ரூ.500 வரை உயர்த்தினர். அதே நேரத்தில் தனியார் வியாபாரிகள் நேரடியாக விளை நிலங்களுக்கு சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்வதால் உலர்த்த வேண்டிய வேலை, கோணிப்பையில் மூட்டைகள் கட்டும் செலவும், வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டிய வேலை குறைந்துள்ளது.

இதனால், 80 கிலோ மூட்டைக்கு ரூ.300 முதல் 400 வரை செலவு குறைகிறது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் சொர்ணவாரி பட்டத்தில் சாகுபடி செய்த நெல் தனியார் வியாபாரிகளுக்கு விற்பனை செய்துள்ளனர்.