பள்ளிப்பட்டு,அக்.10 :ஆர்.கே.பேட்டை அடுத்த சித்தூர்-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் மஞ்சூர் கண்டிகை உள்ளது. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மாநில நெடுஞ்சாலையில் இருந்து கிராமத்திற்கு செல்லும் ஒன்றிய சாலைக்கு அருகில் விவசாய நிலத்தில் தரை மட்டத்தில் 50 அடி உயரம் கொண்ட கிணறு உள்ளது. கிணற்றுக்கு அருகில் சாலையோரத்தில் சுமார் 3 அடி உயரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், சமீபத்தில் கிராமத்திற்கு செல்ல தார் சாலை அமைக்கப்பட்டதால் சாலை மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், கிணறு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் உயரம் குறைந்து காணப்படுகிறது. இதனால், அவ்வழியாக சென்று வரும் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் கிராம சாலையில் சென்று வரும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை நிலவுகிறது. எனவே, கிணறு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் உயரத்தை உயர்த்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


