செங்குன்றம் திருவள்ளூர் நெடுஞ்சாலை பகுதிகளில் உரிய அனுமதியின்றி கட்ட வந்த பேனர்கள் பறிமுதல்: 2 வாகனங்களுக்கு ரூ.10,000 அபராதம்
திருவள்ளூர், அக்.10: திருவள்ளூர் நெடுஞ்சாலை பகுதிகளில் உரிய அனுமதியின்றி இரு வாகனங்களில் ஏற்றி வந்து கட்ட முயன்ற பேனர்களை பறிமுதல் செய்து, ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்க நகராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். எந்த வகை விளம்பர பேனராக இருந்தாலும் நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து, எந்தெந்த இடத்தில் விளம்பர பதாகைகள் அமைக்கப்பட உள்ளது. எத்தனை இடத்தில் அமைக்கப்படுகிறது போன்ற விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, உரிய அனுமதி அளித்த பிறகு டிஜிட்டல் பேனர்களை கட்ட அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த நிலம் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று, அது சம்பந்தமான விளம்பர பதாகைகளை திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை பகுதிகளில் கட்டி வந்துள்ளனர். இதுகுறித்து, தகவல் அறிந்த நகராட்சி ஆணையர் ஏ.சரவணன் உத்தரவின்பேரில், சுகாதார அலுவலர் மோகன், துப்புரவு அலுவலர் விஜய் மற்றும் ஊழியர்கள் விரைந்து சென்று, 2 வாகனங்களில் 25க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் இருப்பதை கண்டறிந்தனர். ஆனால், விளம்பர பதாகைகள் அமைப்பதற்கான எந்த அனுமதியும், நகராட்சி நிர்வாகம் மூலம் பெறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இரு வாகனங்களில் உள்ள விளம்பர பதாகைகளையும் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், உரிய அனுமதியின்றி கட்டி வந்த 2 வாகனங்களுக்கும் தலா ரூ.5,000 வீதம் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது, இனிவரும் காலங்களில் உரிய அனுமதி பெற்ற பிறகே விளம்பர பதாகைகளை அமைக்க வேண்டும், மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக திருவள்ளூர் பொறுப்பு ஆணையராக பதவி ஏற்றிருக்கும் நகராட்சி ஆணையர் ஏ.சரவணன் எச்சரித்துள்ளார். மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.


