Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாசுகட்டுப்பாடு வாரிய விதிகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சிலைகளை கரைக்க நெறிமுறைகள்: பிளாஸ்டர் ஆப் பாரிஸ் உள்ளிட்ட ரசாயன பொருட்களுக்கு தடை

திருவள்ளூர், செப்.10: மாசுகட்டுப்பாடு வாரிய விதிகளின்படி, விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, சிலைகளை கரைக்க வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகளான கடல், ஆறு மற்றும் குளம் ஆகியவை நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.

எனவே, பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ், பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படுகிறது. சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம். மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தொர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கூடாது. நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.

சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம், எண்ணெய் வண்ணப் பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப்பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. மாற்றாக சுற்றுச்சூழலுக்குகந்த நீர் சார்ந்த, மக்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சித்தேரி, ஊத்துக்கோட்டை ஏரி, கொசஸ்தலையாறு, காக்களூர் ஏரி, கூவம் ஏரி, பன்றவேடு குளம், கரிம்பேடு குளம், வண்ணாங்குளம், தாமரைக்குளம், விளாகணாம்பூடி, செல்லத்தூர் ஏரி, வீரமங்கலம், பராசக்தி நகர் குளம், காந்தி ரோடு ஏரி, திருத்தணி முதல் அரக்கோணம் புதிய புறவழிச்சாலை வரையில் நந்தியாறு, கனகம்மாசத்திரம் குளம், திருமழிசை ஏரி, கோளப்பஞ்சேரி ஏரி, அரஃபாத் ஏரி, விலிஞ்சியவாக்கம் ஏரி, கோவில்பதாகை ஏரி, ஏழுகண் பாலம், பழைய சாத்தான்குப்பம் கடற்கரை, கலங்கரை விளக்கம் கடற்கரை ஆகிய இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்டகால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்திவிழா தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்கக்கூடிய ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசுகட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்க வேண்டும். விநாயக சதுர்த்தி விழாவினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டாடும்படி பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா தெரிவித்துள்ளார்.

செய்ய வேண்டியவை

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள், சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்த வேண்டும். சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்த வேண்டும். அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும், பிரசாத விநியோகத்திற்கு மக்கும், மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்த வேண்டும்.

பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள், அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். எல்இடி பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும், அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தலாம்.

செய்யக்கூடாதவை

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளைப் பயன்படுத்த கூடாது. சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு முறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்தகூடாது. சிலைகளின் மேல் பூசிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தண்மையற்ற ரசாயன சாயங்கள், எண்ணெய் வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த கூடாது. சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு முறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது.

வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறிய கூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது. பண்டிகையின்போது ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறிய கூடிய பிளாஸ்டிக்தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்டகூடாது. அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது. பிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்தகூடாது. ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.