திருத்தணி, ஆக.10: திருத்தணி முருகன் கோயிலில் காலை சிற்றுண்டி சாப்பிட கூட்டமாக போலீசார் சென்றனர். ஆனால் கோயில் ஊழியர்கள் சாம்பாரை மறைத்து வைத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா முன்னிட்டு 5 நாட்கள் உபயதாரர் மூலம் தொடர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் உணவு சாப்பிட்டனர். பக்தர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட கோயில் பணியாளர்களும் அன்னதானம் சாப்பிட்டனர். வழக்கமான நாட்களில் பக்தர்கள் மட்டுமின்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார், தூய்மை பணியாளர்களும் மலைக்கோயில் வியாபாரிகளும் கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தில் கலந்து கொண்டு சாப்பிடுவது வழக்கம்.
இந்நிலையில் ஆடி கிருத்திகை விழா நேற்றுமுன்தினம் நிறைவு பெற்ற நிலையில் உபயதாரர் மூலம் அன்னதானம் வழங்குவது அன்றே முடிந்தது. இந்நிலையில், நேற்று முதல் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வழக்கம் போல் அன்னதானம் வழங்கப்படுகிறது. காலை பொங்கல் சாம்பார் சிற்றுண்டியாக வழங்ப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காலை சிற்றுண்டி சாப்பிட்டனர்.
பக்தர்கள் கூட்டத்தோடு கூட்டமாக திருக்கோயிலில் பாதுகாப்பு பணியில் வந்திருந்த போலீசார் மற்றும் ஊர் காவல் படையைச் சேர்ந்தவர்கள் 80க்கும் மேற்பட்டோர் காலை சிற்றுண்டி சாப்பிட அன்னதான கூடம் சென்றுள்ளனர். ஒரே நேரத்தில் போலீசார், ஊர்க்காவல் படையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் வந்ததால் பக்தர்களுக்கு சிற்றுண்டி வழங்க முடியாத நிலையில் கோயில் ஊழியர்கள் சாம்பார் மறைத்து வைத்ததாக கூறப்படுகிறது.
சாம்பார் காலியாகிவிட்டதாக கோயில் ஊழியர்கள் கூறிவிட்டதால் சிறிது நேரம் திகைத்து நின்ற போலீசார் திரும்பி சென்றது நேற்று காலை பரபரப்பை ஏற்படுத்தியது. பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவில் போலீசார், தூய்மை பணியாளர்கள் கோயில் ஊழியர்கள் பங்கேற்று சிற்றுண்டி மற்றும் மதிய உணவு சாப்பிடுவதால் பக்தர்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க திருக்கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.



