ஊத்துக்கோட்டை, ஆக.10: ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் அரசின் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இந்த கடைக்கு ஊத்துக்கோட்டை, பால்ரெட்டி கண்டிகை, தொம்பரம்பேடு, தாராட்சி, செஞ்சியகரம் ஆகிய பகுதிகளில் இருந்து மதுப்பிரியர்கள் மதுகுடிப்பதற்காக செல்வார்கள்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனையாளர் சேகர் மற்றும் மேற்பார்வையாளர் சிவக்குமார் டாஸ்மாக் கடையை மூடிவிட்டு சென்றனர். பின்னர் நேற்று வழக்கம் போல் கடையை திறப்பதற்காக வந்தனர். அப்போது சென்ற போது கடைக்கு போடப்பட்டிருந்த தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது கடையினுள் இருந்த லாக்கர் சேதம் அடைந்திருந்தது. ஆனால் லாக்கரை உடைக்க முடியவில்லை என்பதால் மர்ம நபர்கள், கடையில் இருந்த விலை உயர்ந்த 5 மது பானங்களை எடுத்துச்சென்று விட்டனர்.
இது குறித்து டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் சிவக்குமார் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் எஸ்.எஸ்.ஐ. சேகர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தாராட்சி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.



