தாமரைப்பாக்கத்தில் இருந்து சோழவரம் ஏரி வரை புதர்மண்டி காணப்படும் ஏரி கால்வாய்: தூர்வாரி கரைகளை பலப்படுத்தி சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
ஊத்துக்கோட்டை, அக்.9: தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாய் புதர் மண்டி, கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இந்த கால்வாயில் உள்ள புதர்களை அகற்றியும், தூர்வாரி கரைகளை பலப்படுத்தியும் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. இந்த தடுப்பணையில் மழை காலங்களில் பூண்டி ஏரி நிரம்பினால் அந்த தண்ணீர் திறக்கப்பட்டு தாமரைப்பாக்கம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்படும். மீதமுள்ள உபரிநீர் அணைக்கட்டிலிருந்து வெளியேரி கடலுக்கு செல்லும். மேலும், தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அங்குள்ள கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு திறக்கப்பட்டு அங்கிருந்து புழல் ஏரிக்கு அனுப்பப்பட்டு அது சென்னை மக்களுக்கு குடிநீர் தேவைக்காக விநியோகம் செய்யப்படும்.
ஆனால், கடந்த சில மாதங்களாக தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் செடி-கொடிகள் படர்ந்து கால்வாய் முழுவதும் புதர்கள் மண்டிக் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அந்த கால்வாயில் அக்கம் பக்கம் உள்ள வீடு, கடைகளிலிருந்து வெளியேறும் கழிவு நீரும் கால்வாயில் கலந்து தேங்கி நிற்கிறது. எனவே, இந்த கால்வாயில் உள்ள புதர்களை அகற்றி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணையில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டதால் இங்குள்ள விவசாயிகள் பயன் பெற்றனர். மேலும், சென்னை மக்களின் தாகம் தீர்ப்பதற்காக இந்த அணைக்கட்டில் இருந்து சோழவரம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டு அது புழல் ஏரிக்கு அனுப்பப்படும்.
மேலும், தாமரைப்பாக்கத்திலிருந்து சோழவரம் ஏரிக்கு செல்லும் கால்வாயில் தற்போது செடி-கொடிகள் படர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. தற்போது கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. எனவே, சோழவரத்திற்கு செல்லும் ஏரிக்கால்வாயை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரியும், கால்வாய் கரைகளை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு தூர்வாரினால் சோழவரம் ஏரிக்கு தண்ணீர் செல்லும்போது கால்வாய் ஓரத்தில் உள்ள விவசாயிகள் நிலத்தடி நீர் உயர்ந்து பயனடைவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


