Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

கண்டலேறு அணை தண்ணீர் நிறுத்தம்; கிடப்பில் போடப்பட்ட கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணி தொடங்குமா?.. விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஊத்துக்கோட்டை, அக்.9: ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் திறக்கப்பட்ட கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கிடப்பில் போடப்பட்ட கால்வாய் சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்குமா என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி 15 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும். இதில் 3 டிஎம்சி சேதாரம் போக, ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி என 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.

இந்நிலையில், ஜூலை முதல் அக்டோபர் வரை திறக்க வேண்டிய தண்ணீர் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறுவில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடந்த வாரம் 1200 கன அடியாகவும், கடந்த மாதம் 800 கன அடியாக குறைந்து திறக்கப்பட்டது.

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி வினாடிக்கு 451 கன அடியாக வந்த தண்ணீர் பின்னர் 92 கன அடியாக குறைந்து வந்த தண்ணீர், கடந்த மாதம் நிறுத்தப்பட்டது. மேலும் இதுவரை தமிழகத்திற்கு 2.25 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் ஆனால் இது வரை 2.25 டிஎம்சி வரை மட்டுமே வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாத இறுதியில் ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் கிருஷ்ணா கால்வாய் சீரமைப்பு பணிகள் நடந்தது. பிப்ரவரி மாத இறுதியில் இரண்டாவது தவணையாக தண்ணீர் திறக்கப்பட்டதால் கால்வாய் பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த தண்ணீரும் நிறுத்தப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட சீரமைப்பு பணிகள் மீண்டும் தொடங்குமா என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.