Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி; மீனவர்கள் இடையே பயங்கர மோதல்: 7 பேர் மருத்துவமனையில் அனுமதி

பொன்னேரி, அக்.9: பழவேற்காடு ஏரியில் தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகு சவாரி அழைத்து சென்றதால் இருதரப்பு மீனவர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில், படுகாயம் அடைந்த 7 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் கடந்த 2011ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். அப்போது, திடீரென படகு கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 22 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தால் பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டது. இருந்தபோதிலும் தடையை மீறி பழவேற்காடு ஏரியில் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்தான நிலையில் படகு சவாரி நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அத்துமீறி படகு சவாரி அழைத்து சென்றதால், இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. தோனிரேவு கிராமத்தை சேர்ந்த தேன் என்ற மீனவர் படகில் தடையை மீறி சென்னையை சேர்ந்த 20 பேர் குழுவை சுற்றுலா அழைத்து சென்று முகத்துவாரத்தில் இரவு தங்கியுள்ளனர். அப்போது, ஆண்டிகுப்பத்தை சேர்ந்த சிக்கந்தர் என்ற மீனவரும் தடையை மீறி மற்றொரு குழுவை சுற்றுலா அழைத்து வந்துள்ளார். இது தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். சுற்றுலா பயணிகளும் தாக்கிக்கொண்டதில் 7 பேர் காயமடைந்து பழவேற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட நிலையில், பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற விவகாரத்தில் இருதரப்பு மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.